அருண் கார்த்திக் அபார சதம்: மதுரை அணியிடம் வீழ்ந்தது கோவை


அருண் கார்த்திக் அபார சதம்: மதுரை அணியிடம் வீழ்ந்தது கோவை
x
தினத்தந்தி 2 Aug 2019 10:30 PM GMT (Updated: 2 Aug 2019 9:11 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அருண் கார்த்திக்கின் அபார சதத்தின் உதவியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி கோவை கிங்சை வீழ்த்தியது.

திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அருண் கார்த்திக்கின் அபார சதத்தின் உதவியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி கோவை கிங்சை வீழ்த்தியது.

அருண் கார்த்திக் சதம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மாலை நத்தத்தில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, கோவை கிங்சை சந்தித்தது.

இதில் முதலில் பேட் செய்த மதுரை அணியில் நட்சத்திர வீரர் அருண் கார்த்திக்கும், சரத் ராஜியும் அதிரடியோடு இன்னிங்சை தொடங்கினர். சரத்ராஜ் 3 சிக்சருடன் 20 ரன்கள் (9 பந்து) விளாசினார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் அருண்கார்த்தி நிலைத்து நின்று அட்டகாசப்படுத்தினார். கோவை பந்து வீச்சை துவம்சம் செய்த அவர் சிக்சர் அடித்து சதத்தை எட்டினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். டி.என்.பி.எல். வரலாற்றில் வீரர் ஒருவரின் 6-வது சதமாக அமைந்தது. அருண் கார்த்திக் 106 ரன்களில் (61 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) கிளன் போல்டு ஆனார்.

கடைசி கட்டத்தில் மிரட்டிய ஜே.கவுசிக், அந்தோணி தாசின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் ஒரு அணியின் அதிகபட்சம் இது தான். ஜே.கவுசிக் 43 ரன்களுடன் (23 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.

கோவை தோல்வி

தொடர்ந்து ஆடிய கோவை அணியில் கேப்டன் அபினவ் முகுந்த் (50 ரன், 38 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்றவர்களின் ஆட்டம் பெரிய அளவில் இல்லை. மதுரை அணி போன்று கோவை தரப்பும் மொத்தம் 11 சிக்சர் விரட்டிய போதிலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய கோவை அணி 9 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் மதுரை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தனது 3-வது வெற்றியை சுவைத்தது.

இந்த ஆட்டத்தில் மதுரை பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செல்வகுமரன் 4 விக்கெட்டுகளும், அபிஷேக் தன்வர், ஜே.கவுசிக் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். கோவை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Next Story