கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்:மதுரை அணி 4-வது வெற்றி + "||" + TNPL Cricket: Madurai team wins 4th

டி.என்.பி.எல். கிரிக்கெட்:மதுரை அணி 4-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்:மதுரை அணி 4-வது வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

கார்த்திக் 39 ரன்

8 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் திண்டுக்கல் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்சுடன் மல்லுகட்டியது. ‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் ஷிஜித் சந்திரன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி பேட்டிங்கை அதிரடியாக ஆரம்பித்த மதுரை அணியில் சரத்ராஜ் 18 ரன்களில் (11 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். இதன் பின்னர் நட்சத்திர வீரர் அருண் கார்த்திக்கும், ஷிஜித் சந்திரனும் ஜோடி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். ஷிஜித் சந்திரன் 5 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ஆரிப் தவற விட்டார். அதன் பிறகு இந்த கூட்டணியை 13-வது ஓவரில் தான் உடைக்க முடிந்தது.

ஸ்கோர் 93 ரன்களை எட்டிய போது ஷிஜித் சந்திரன் 39 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து அருண் கார்த்திக் (39 ரன், 36 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), அபிஷேக் தன்வர் (1 ரன்), ஜே.கவுசிக் (7 ரன்) ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேற கில்லீஸ் பவுலர்களின் கை சற்று ஓங்கியது. 26 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் நிலேஷ் சுப்பிரமணியன் (31 ரன், 15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மிதுன் (16 ரன்)துரிதமாக ஆடி அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வழிவகுத்தார்.

172 ரன்கள் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. கில்லீஸ் தரப்பில் ஹரிஷ்குமார், பெரியசாமி தலா 2 விக்கெட்டுகளும், டி.ராகுல், அலெக்சாண்டர், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கங்கா ஸ்ரீதர் ராஜூ (6 ரன்), கேப்டன் கவுசிக் காந்தி (6 ரன்), விக்கெட் கீப்பர் ஆரிப் (0) ஆகியோர் 14 ரன்னுக்குள் நடையை கட்டினர். இந்த நெருக்கடியில் இருந்து அணியை மீட்க கோபிநாத் (45 ரன், 32 பந்து, 5 சிக்சர்), சசிதேவ் (51 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் போராடினாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

மதுரை அணி வெற்றி

20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தனது 4-வது வெற்றியை ருசித்தது. மதுரை வேகப்பந்து வீச்சாளர்கள் அபிஷேக் தன்வர், கிரன் ஆகாஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கில்லீஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.