வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 4 Aug 2019 11:30 PM GMT (Updated: 4 Aug 2019 7:48 PM GMT)

மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டு தொடரையும் கைப்பற்றியது.

லாடெர்ஹில், 

மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டு தொடரையும் கைப்பற்றியது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரோகித் சர்மா மேலும் சில பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டார். தவானும் ஒத்துழைப்பு கொடுக்க இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்தனர். தவான் 23 ரன்களில் (16 பந்து, 3 பவுண்டரி) போல்டு ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார். சுனில் நரின், பிராத்வெய்ட்டின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோகித் சர்மா தனது 17-வது அரைசதத்தை கடந்தார். 12.1 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.

ரோகித் சர்மா 67 ரன்

அணியின் ஸ்கோர் 115 ரன்களை எட்டிய போது ரோகித் சர்மா 67 ரன்களில் (51 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். தனது பங்குக்கு 28 ரன்கள் (23 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த கேப்டன் விராட் கோலிக்கு, காட்ரெலின் யார்க்கர் பந்து வீச்சில் மிடில் ஸ்டம்பு பல்டி அடித்தது.

இதற்கிடையே ரிஷாப் பண்ட் 4 ரன்னில் வெளியேறினார். மனிஷ் பாண்டேவும் (6 ரன்) தடுமாற 16 முதல் 19 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. ஆறுதல் அளிக்கும் வகையில் கடைசி ஓவரில் குருணல் பாண்ட்யா 2 சிக்சரும், ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சரும் ஓடவிட்டு சவாலான ஸ்கோருக்கு வழிவகுத்தனர்.

மழையால் பாதிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. குருணல் பாண்ட்யா 20 ரன்களுடனும் (13 பந்து, 2 சிக்சர்), ஜடேஜா 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒஷானே தாமஸ், காட்ரெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. சுனில் நரின் 4 ரன்னிலும், இவின் லீவிஸ் ரன் ஏதுமின்றியும், நிகோலஸ் பூரன் 19 ரன்னிலும், ரோவ்மன் பவெல் 54 ரன்னிலும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அந்த அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்த போது மழைமேகம் திரண்டு போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்ததால் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.

இதன்படி 15.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 121 ரன்கள் தேவையானதாக இருந்தது. இதன் அடிப்படையில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய தரப்பில் குருணல் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடரை வென்றது இந்தியா

ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்ததால் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது.

Next Story