கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று பலப்பரீட்சை + "||" + First qualifying round for the finals: Chepauk Super Gillies - Dindigul Dragons Clash Today

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று பலப்பரீட்சை

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று பலப்பரீட்சை
இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இந்த நிலையில் ‘பிளே-ஆப்’ சுற்று நெல்லையில் இன்று தொடங்குகிறது. இதில் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் மல்லுகட்டுகின்றன.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த சீசனில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றது. கோபிநாத்தின் நேர்த்தியான பேட்டிங்கும் (3 அரைசதம் உள்பட 277 ரன்), பெரியசாமி (13 விக்கெட்), ஹரிஷ்குமார் (14 விக்கெட்), அலெக்சாண்டர் (11 விக்கெட்), முருகன்அஸ்வின் (7 விக்கெட்) ஆகியோரின் அபார பந்து வீச்சும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரின் வருகை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவரது அனுபவம் நிச்சயம் கில்லீஸ் அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் 30 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தடுமாறியது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடக்க லீக்கில் 10 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதற்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்தது. ஆர்.அஸ்வினின் கேப்டன்ஷிப்பும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 361 ரன்), ஹரி நிஷாந்த் (238 ரன்) உள்ளிட்டோரின் பேட்டிங்கும் திண்டுக்கல் அணிக்கு பக்கபலமாக இருக்கிறது. லீக் சுற்றை போல் பிளே-ஆப் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர். மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

மெதுவான தன்மை கொண்ட நெல்லை ஆடுகளத்தில் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த மைதானத்தில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த ராசி இந்த ஆட்டத்திலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோத வேண்டும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முதலாவது தகுதிசுற்று போட்டியையொட்டி எங்கள் வீரர்கள் சிறப்பான பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சுடன் மோதி இருக்கிறோம். அந்த போட்டியின் முடிவு எங்களுக்கு ஒரு அனுபவத்தை தந்தது. அந்த அனுபவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு போட்டியிடுவோம். லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் வெற்றி கண்டோம். அதே போல் இந்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

திண்டுக்கல் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்காக சென்னைக்கு செல்வதற்கு ஆர்வமாக உள்ளோம். இருப்பினும் இந்த ஆட்டம் சுலபமாக இருக்காது’ என்று குறிப்பிட்டார்.

இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) ஷிஜித் சந்திரன் தலைமையிலான நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்றில் ஆடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை அணி தீவிரம் காட்டும்.

இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.