4-வது வரிசையில் ஸ்ரேயாசை இறக்க வேண்டும் - கவாஸ்கர் கருத்து


4-வது வரிசையில் ஸ்ரேயாசை இறக்க வேண்டும் - கவாஸ்கர் கருத்து
x
தினத்தந்தி 12 Aug 2019 11:09 PM GMT (Updated: 12 Aug 2019 11:09 PM GMT)

4-வது வரிசையில் ஸ்ரேயாசை இறக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஒருநாள் போட்டியில் டோனியை போல் ரிஷாப் பண்ட் 5-வது அல்லது 6-வது வரிசையில் களம் இறங்க பொருத்தமானவர். அதிரடி ஆட்டக்காரரான அவருக்கு அந்த வரிசையில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி நல்ல தொடக்கம் கண்டு 40-45 ஓவர் வரை தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று விட்டால் ரிஷாப் பண்டை 4-வது வீரராக இறக்கலாம். 30-35 ஓவர்களில் களம் இறங்கும் வாய்ப்பு வந்தால் ஸ்ரேயாஸ் அய்யரை 4-வது வீரராக களம் இறக்க வேண்டும். அந்த மாதிரி தருணத்தில் ரிஷாப் பண்டை 5-வது வீரராக களம் இறக்கலாம். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டார். 5-வது வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டாலும் அவருக்கு கேப்டன் விராட்கோலியுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்த ஆட்டத்தில் நிறைய பாடம் கற்று இருப்பார். மறுமுனையில் நிற்கையில் தான் கிரிக்கெட்டில் அதிகம் கற்று கொள்ள முடியும். ஸ்ரேயாஸ் அய்யர், விராட்கோலி மீதான நெருக்கடியை போக்கும் வகையில் விளையாடினார். இந்த இன்னிங்ஸ் அவருக்கு நிலையான இடத்தை பெற்றுத்தரவில்லை என்றால் வேறு என்ன பெற்று தரும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த போட்டிக்கு முன்பு ஆடிய 5 ஆட்டத்தில் அவர் 2 அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் நீண்ட காலம் வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story