கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது + "||" + Against the West Indies The last one day cricket Indian team wins

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் 72 ரன்களும் (41 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), இவின் லீவிஸ் 43 ரன்களும் விளாசினர். வெஸ்ட்இண்டீஸ் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. 2 மணி நேரம் பாதிப்புக்குள்ளானதால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. நிகோலஸ் பூரன் 30 ரன்களும், ஹெட்மயர் 25 ரன்களும் எடுத்தனர்.


பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 10 ரன்னிலும், அடுத்து வந்த ரிஷாப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமலும், கடந்த ஆட்டங்களில் சொதப்பிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 36 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 12.4 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்து திணறியது.

4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 26.1 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 212 ரன்னாக இருந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் (65 ரன்கள், 41 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கெமார் ரோச் பந்து வீச்சில் ஜாசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 120 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து கேதர் ஜாதவ் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 94 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் அடித்த 43-வது சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அவரது 9-வது சதம் இது. முந்தைய ஆட்டத்திலும் விராட்கோலி சதம் அடித்து இருந்தார்.

இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி 99 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 114 ரன்னும், கேதர் ஜாதவ் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். விராட்கோலி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘2 ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து பேட்டிங் செய்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடிய விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடி அணியை வெற்றி பெற வைப்பதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுப்பேன். அதனை தான் ஸ்ரேயாஸ் அய்யரும் செய்தார். நெருக்கடிக்கு மத்தியில் அவர் துணிச்சலாக விளையாடினார். இதேபோல் செயல்பட்டால் அவர் மிடில் வரிசையில் நிரந்தமாக இடம் பிடித்து விடுவார். இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சற்று நெருக்கடி இருந்தது. ஸ்ரேயாஸ் இன்னிங்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவர் சிறப்பாக செயல்பட்டு எனக்கு இருந்த நெருக்கடியை போக்கினார். இந்த ஆட்டம் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்’ என்றார்.

தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில் ‘நாங்கள் நல்ல தொடக்கம் கண்டோம். ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது. மழை பெய்த பிறகு ஈரப்பதம் இருந்ததால் நாங்கள் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. விராட்கோலி (11 ரன்னில்) கொடுத்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டோம். அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது. எல்லா சிறப்பும் அவரது பேட்டிங்குக்கே சாரும்’ என்றார்.

ஸ்கோர் போர்டு  - வெஸ்ட் இண்டீஸ்

கிறிஸ் கெய்ல் (சி) விராட்கோலி

(பி) கலீல் அகமது 72

இவின் லீவிஸ் (சி) ஷிகர்தவான்

(பி) யுஸ்வேந்திர சாஹல் 43

ஷாய் ஹோப் (பி)

ரவீந்திர ஜடேஜா 24

ஹெட்மயர் (பி) முகமது ஷமி    25

நிகோலஸ் பூரன் (சி) (சப்) மனிஷ்

பாண்டே (பி) முகமது ஷமி 30

ஜாசன் ஹோல்டர்(சி)விராட்கோலி

(பி) கலீல் அகமது 14

பிராத்வெய்ட் (சி) ரிஷாப் பண்ட்

(பி) கலீல் அகமது 16

பாபியன் ஆலென் (நாட்-அவுட்)    6

கீமோ பால் (நாட்-அவுட்)    0

எக்ஸ்டிரா    10

மொத்தம் (35 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 240

விக்கெட் வீழ்ச்சி: 1-115, 2-121, 3-171, 4-171, 5-211, 6-221, 7-236.

பந்து வீச்சு விவரம்:


புவனேஷ்வர்குமார்    5-1-48-0

முகமது ஷமி 7-1-50-2

கலீல் அகமது    7-0-68-3

யுஸ்வேந்திர சாஹல்    7-0-32-1

கேதர் ஜாதவ்    4-0-13-0

ரவீந்திர ஜடேஜா    5-0-26-1

இந்தியா

ரோகித் சர்மா (ரன்-அவுட்)    10

ஷிகர்தவான் (சி) கீமோ பால்

(பி) பாபியன் ஆலென் 36

விராட் கோலி (நாட்-அவுட்)    114

ரிஷாப் பண்ட் (சி) கீமோ பால்

(பி) பாபியன் ஆலென் (0)

ஸ்ரேயாஸ் அய்யர் (சி) ஜாசன்

ஹோல்டர் (பி) கெமார் ரோச் 65

கேதர் ஜாதவ் (நாட்-அவுட்)    19

எக்ஸ்டிரா    12

மொத்தம் (32.3 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 256

விக்கெட் வீழ்ச்சி: 1-25, 2-91, 3-92, 4-212.

பந்து வீச்சு விவரம் :

கெமார் ரோச்    7-0-53-1

ஜாசன் ஹோல்டர்    4-0-39-0

கீமோ பால்    5-0-39-0

பாபியன் ஆலென்    6-0-40-2

ரோஸ்டன் சேஸ்    7-0-43-0

பிராத்வெய்ட்    3.3-0-38-0

பந்து தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்படவில்லை-கோலி
இந்த ஆட்டத்தின் 27-வது ஓவரில் கெமார் ரோச் வீசிய பந்து விராட்கோலியின் வலது பெருவிரலில் தாக்கியது. வலியால் துடித்த அவர் சிகிச்சை பெற்று தொடர்ந்து பேட்டிங் செய்தார். காயம் குறித்து விராட்கோலி பதில் அளிக்கையில், ‘பந்து தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை. நகத்தில் லேசான பிளவு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருப்பேன் என நம்புகிறேன்’ என்றார்.

தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட்கோலி

* ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 சதம் அடித்துள்ளார். விராட்கோலி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்று முன்தினம் 9-வது சதம் அடித்தார். இதன் மூலம் தெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார்.

* கடந்த 10 ஆண்டுகளில் விராட்கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் ஆட்டங்களில் சேர்த்து) 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 10 ஆண்டு காலத்தில் சர்வதேச போட்டியில் 20 ஆயிரம் ரன்கள் திரட்டிய முதல் வீரர் விராட்கோலி ஆவார்.