கிரிக்கெட்

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு + "||" + Vikram Rathore selected as India's batting coach

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் செயல்பட உள்ளார்.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் செயல்பட உள்ளார்.

உதவி பயிற்சியாளர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார். அடுத்ததாக உதவி பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடத்தியது. இதன் முடிவில் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரும் தொடருகிறார்கள். பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்து இருந்த போதிலும் அவரை பரத் அருண் பின்னுக்கு தள்ளினார்.

இதற்கு முன்பு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் இருந்தார். அவர் மட்டும் இப்போது மாற்றப்படுகிறார். பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் முடிவில் விக்ரம் ரதோரை அந்த பொறுப்புக்கு பரிந்துரை செய்து அவருக்கு முதலிடத்தை தேர்வு கமிட்டி வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் சஞ்சய் பாங்கர் 2-வது இடத்திலும், மார்க் ராம்பிரகாஷ் (இங்கிலாந்து) 3-வது இடத்திலும் உள்ளனர். இதன் மூலம் விக்ரம் ரதோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது.

விக்ரம் ரதோர்

இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான பஞ்சாப்பை சேர்ந்த 50 வயதான விக்ரம் ரதோர் இந்திய அணிக்காக 7 ஒரு நாள் போட்டியில் ஆடி 193 ரன்களும், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 133 ரன்களும் எடுத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளில் சாதிக்காவிட்டாலும் முதல்தர கிரிக்கெட்டில் 146 ஆட்டங்களில் பங்கேற்று 33 சதம் உள்பட 11,473 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி நிருபர்களிடம் கூறுகையில், ‘விக்ரம் ரதோருக்கு போதுமான அனுபவம் உள்ளது. பயிற்சியாளருக்குரிய அவரது திறமையில் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். இந்திய அணியின் உடல்தகுதி நிபுணராக நிதின் பட்டேல் மீண்டும் நியமிக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இந்திய அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக அணியின் புதிய மேலாளராக கிரிஷ் டோங்ரே தேர்வாகிறார்.