பந்து தலைகவசத்தை தாக்கியதில் காயம் - தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்


பந்து தலைகவசத்தை தாக்கியதில் காயம் - தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்
x
தினத்தந்தி 21 Oct 2019 11:17 PM GMT (Updated: 21 Oct 2019 11:17 PM GMT)

உமேஷ் யாதவ் வீசிய பந்து தலைகவசத்தில் தாக்கியதால் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார். பின்னர் மாற்று வீரராக டி புருன் களம் இறங்கினார்.

ராஞ்சி,

தென்ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்சில் 9.3 ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பவுன்சர் பந்து தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரின் (16 ரன்) தலைகவசத்தை (ஹெல்மெட்டை) பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த டீன் எல்கர் தலையை பிடித்தபடி அப்படியே மைதானத்தில் உட்கார்ந்து விட்டார். உடனடியாக இந்திய அணி வீரர்கள் அவரின் ஹெல்மெட்டை கழற்றி ஆசுவாசப்படுத்தினார்கள். தென்ஆப்பிரிக்க அணியின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார். அத்துடன் தேனீர் இடைவேளை முன்னதாகவே விடப்பட்டது.

வலது புற காது பகுதியில் காயம் அடைந்த டீன் எல்கருக்கு தலை சுற்றுவது போல் இருந்ததால் மீண்டும் அவர் பேட்டிங் செய்யவரவில்லை. வீரர் ஒருவருக்கு போட்டியின் போது தலையில் காயம் அடைந்து பிரச்சினை ஏற்பட்டு களம் இறங்க முடியாமல் போனால் மாற்று வீரரை களம் இறக்க கடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்தது. இந்த புதிய விதிமுறையின் படி டீன் எல்கருக்கு பதிலாக டி புருனை களம் இறக்க நடுவர்கள் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவர் களம் இறங்கி விளையாடினார். டெஸ்ட் போட்டியில் வீரருக்கு தலையில் காயம் அடைந்ததை தொடர்ந்து மாற்று வீரராக களம் கண்ட 3-வது வீரர் டி புருன் ஆவார். ‘டீன் எல்கருக்கு தலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சரியாகும் வரை அவருக்கு தொடர்ந்து மருத்துவ சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர் குறைந்தபட்சம் 6 நாட்கள் விளையாட முடியாது’ என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Next Story