இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு 31-வது பிறந்த நாள்: கிரிக்கெட் உலகினர் வாழ்த்து


இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு 31-வது பிறந்த நாள்: கிரிக்கெட் உலகினர் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Nov 2019 12:04 AM GMT (Updated: 6 Nov 2019 12:04 AM GMT)

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் 31-வது பிறந்த நாளான நேற்று கிரிக்கெட் உலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி 2008-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் விராட்கோலி இதுவரை 82 டெஸ்ட் போட்டியில் விளையாடி 26 சதங்களுடன் 7,066 ரன்னும், 239 ஒருநாள் போட்டியில் 43 சதங்களுடன் 11,520 ரன்னும், 72 இருபது ஓவர் போட்டியில் 2,450 ரன்னும் என மொத்தம் 21,036 ரன்கள் குவித்து உலகமே உற்றுநோக்கும் உன்னதமான பேட்ஸ்மேனான விளங்குகிறார். அத்துடன் வெற்றிகரமான கேப்டனாகவும் வலம் வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி 31 டெஸ்டுகளில் வெற்றி கண்டுள்ளது.

வங்காளதேச 20 ஓவர் தொடரில் ஆடாமல் ஓய்வில் இருக்கும் ‘சாதனையின் சிகரம்’ விராட் கோலிக்கு நேற்று 31-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு பூடானில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி அங்கு தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். மலை கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட கோலி தம்பதி அந்த குடும்பத்தினர் தங்களுக்கு தேனீர் அளித்து உபசரித்ததை நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். பிறந்த நாளையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விராட்கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், லட்சுமண், ரோகித் சர்மா, யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் உலகத்தினர் பலரும் விராட்கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள், சமூக வலைதளம் மூலமாக வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கு நன்றி தெரிவித்துள்ள விராட்கோலி தனக்கு தானே அறிவுரை கூறுவது போல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘விராட், வாழ்க்கையில் உனக்கு அபாரமான விஷயங்கள் காத்து இருக்கின்றன. உன் வழியில் வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. எல்லோரையும் போல் நீயும் தோல்வி அடைவாய். ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் மீண்டு எழுவேன் என்பதை ஒருபோதும் மறந்து விடாதே. முதல்முறை முடியாமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய். உன்னை பலர் விரும்புவார்கள். பலர் வெறுப்பார்கள். உன்னை பற்றி தெரியாதவர்களும் வெறுப்பார்கள். அதனை பற்றி கவனத்தில் எடுத்து கொள்ளாதே?. உன் மீது நம்பிக்கை வை’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story