‘‘பல ஏமாற்றங்களை சந்தித்தவனுக்கு, இந்த ஒரு வெற்றி போதாது’’ -ராகுல் சாஹர்


‘‘பல ஏமாற்றங்களை சந்தித்தவனுக்கு, இந்த ஒரு வெற்றி போதாது’’ -ராகுல் சாஹர்
x
தினத்தந்தி 16 Nov 2019 1:15 AM GMT (Updated: 15 Nov 2019 1:25 PM GMT)

‘‘தீபக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏமாற்றங்களே நிறைந்திருந்தன. பல தருணங்களில் அவன் இந்திய அணிக்காக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவனது வாய்ப்புகள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத காரணங்களால் பறிக்கப்பட்டன. இல்லையேல், தீபக் 15 வயதிலேயே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்திருப்பான்’’ என்று அண்ணனின் புகழ் பாடுகிறார், தீபக் சாஹரின் தம்பி ராகுல் சாஹர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழல் நட்சத்திரமாக திகழும் ராகுல், தீபக்கை பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.

‘‘தீபக்கிற்கு படிப்பை விட பந்துவீச்சில்தான் ஆர்வம் அதிகம். இந்த விஷயம் அப்பாவிற்கும் தெரியும். அதனால்தான், அவனை விளையாட்டு துறையில் ஆர்வப்படுத்தினார். அவனுக்கு பந்தை வேகமாக வீசவும், பந்தை ‘ஸ்விங்’ முறையில் வீசவும் பிடிக்கும். 15 வயதிலேயே அந்த வித்தையில், அவன் கில்லாடி. ஒருமுறை ரஞ்சி போட்டியில் ஐதராபாத்தின் இன்னிங்ஸை வெறும் 16 ஓவர்களில் முடித்து காட்டினான். பலம் பொருந்திய ஐதராபாத் அணி, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெறும் 21 ரன்களுக்குள் சுருண்டது. அந்த போட்டியில் தீபக், 8 விக்கெட்டுகளை வீழ்த்தினான். அப்படி இருந்தும், அவனது கிரிக்கெட் வாழ்க்கை இப்போதுதான் சூடுபிடித்திருக்கிறது. ஏனெனில், ஒருசிலரின் காழ்ப்புணர்ச்சி, காயம்... என தீபக்கின் வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை கொண்டது. இனியாவது ஏற்றத்தோடு வாழட்டும்’’ என்கிறார், ராகுல்.

ஆம்..! தீபக்கின் வாழ்க்கையில் பல முறை ஏமாற்றம் நிழலாடி இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், தீபக்கை ‘‘முதல்தர கிரிக்கெட்டிற்கு லாயக்கு இல்லாதவன்’’ என திட்டி தீர்த்திருக்கிறார். இது நடந்து முடிந்த 4 வருடங்களிலேயே தீபக் இந்திய அணிக்குள் நுழைந்தார். ஆனால் அம்முறை தீபக்கின் உடல்நிலை, அவரது விளையாட்டு வாழ்க்கைக்கு வில்லனாக மாறியது.

‘‘தீபக்கின் உடல்நிலை எப்போதும் சீராக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர் என்பதால், கால்களில் திடீர் காயம், தசைப் பிடிப்பு, தோள்பட்டை வலி... என புதிது புதிதாக ஏதாவது ஒன்றை சொல்லி கொண்டிருப்பான். அதனால் அவனை பெற்றோர் பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

நான் நிறைய முறை தீபக்கோடு பந்து வீசியிருக்கிறேன். அவனது பந்துவீச்சு முறை என்னை பயமுறுத்தும். ஏனெனில் அவன் காயப்பட்டால், அவனோடு நானும் வீட்டில் அடிவாங்குவேன். அதனால் அவனை காயப்படாமல் பார்த்து கொள்வது, என்னுடைய முக்கிய வேலையாகிவிடும். எவ்வளவு கவனமாக இருந்தாலும் சரி, அவனையும், காயத்தையும் அவ்வளவு எளிதாக பிரித்துவிட முடியாது’’ என்றவர், காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையில் ஏற்படுத்திய பெரும் தாக்கங்களை பற்றி கூறினார்.

‘‘இந்திய கிரிக்கெட் அணியின் ‘அண்டர்-19’ அணியில் அவன் இடம்பிடித்திருந்தான். வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பும்போது அவனது கால் பகுதி காயமானது. அழுது புலம்புவதை தவிர அவனால் வேறு என்ன செய்ய இயலும். ஏனெனில் 6 வருட புறக்கணிப்பிற்கு பிறகு அப்போதுதான், தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் காயத்தினால் காணாமல் போனதை நினைத்து, புலம்பினான்’’ என்றவர், அண்ணனின் விளையாட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். அதனால்தான் சமீபத்திய வெற்றியை கூட கொண்டாட முடியாமல் ஸ்தம்பித்து நின்றிருக்கிறார்.

‘‘வங்காள தேசத்திற்கு எதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை தீபக் அள்ளினான். அன்று, ஒட்டுமொத்த இந்தியாவும் தீபக்கை கொண்டாடியது. ஆனால் நான் மட்டும் அமைதியாக இருந்தேன். நான் மைதானத்திற்குள் இருந்தபோது, கே.எல்.ராகுல் என்னிடம் பேசினார். ‘உங்க அண்ணன்தான், இன்றைய ஆட்டத்தின் நாயகன். ஆனால் நீ அமைதியாக இருக்கிறாயே?' என்றார். ஆனால் எனக்கு அந்த வெற்றியை கொண்டாட மனமில்லை. ஏனெனில் தீபக் ஏராளமான ஏமாற்றங்களை சந்தித்தவன். அவனுக்கு இந்த ஒரு வெற்றி மட்டும் போதாது என்ற எண்ணத்தில், நான் அமைதியாகவே இருந்துவிட்டேன். ஒரு நாள் நானும் தீபக்கை கொண்டாடுவேன். அன்று, அவன் உலகின் தலைசிறந்த பவுலராக உருவெடுத்து, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருப்பான்’’ என்ற வரிகளோடு விடைக் கொடுக்கிறார், ராகுல் சாஹர்.

Next Story