விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு இது கொஞ்சம் கடினமான காலக்கட்டம் - எம்.எஸ்.கே.பிரசாத்


விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு இது கொஞ்சம் கடினமான காலக்கட்டம் - எம்.எஸ்.கே.பிரசாத்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:06 PM GMT (Updated: 27 Nov 2019 11:06 PM GMT)

இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு இது கொஞ்சம் கடினமான காலக்கட்டமாக உள்ளதாக எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.


* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 4 ரன்னில் கிளன் போல்டு ஆனார். ஆட்ட நேரம் முடிந்த பிறகு அவர் மைதானத்தில் இருந்து ஓட்டலுக்கு 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடியே சென்றுள்ளார். இது குறித்து சுமித் கூறுகையில், ‘போட்டியில் ரன் எடுக்காமல் சொதப்பினால் இது போன்று ஓடுவேன் அல்லது ஜிம்முக்கு செல்வேன். இது எனக்கு நானே வழங்கிக்கொள்ளும் தண்டனை. அதே சமயம் சதம் அடித்தால் சாக்லெட் பாருக்கு சென்று மகிழ்ச்சியை கொண்டாடுவேன்’ என்றார்.

* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்டேட் வங்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் கனரக வாகன தொழிற்சாலை அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் ஏர் இந்தியா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணியையும், தமிழ்நாடு மின்சார வாரிய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஹோம்லி ஆக்கி கிளப்பையும் வீழ்த்தியது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 37 வயதான ஜார்ஜ் பெய்லி. இவர் ஆஸ்திரேலிய அணியின் 3 தேர்வாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த சீசனுக்கான பிக்பாஷ் போட்டியில் விளையாடி முடித்ததும், கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று பிப்ரவரி மாதம் தேர்வு குழுவில் இணைகிறார்.

* சென்னை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டி இந்து கல்லூரியில் நடந்தது. இதில் தனது 3 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு இது கொஞ்சம் கடினமான காலக்கட்டமாக உள்ளது. அவரிடம் நம்ப முடியாத அளவுக்கு திறமை இருக்கிறது. சில ஆட்டங்களில் நன்றாக விளையாடிவிட்டால், அதன் மூலம் மிகச்சிறந்த நிலைக்கு வந்து விடலாம். டோனியின் இடத்தை நிரப்ப அவர் முயற்சிப்பதால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகிறார். அவர் தன்னை டோனியுடன் ஒரு போதும் ஒப்பிடக்கூடாது. தனது தனித்துவமான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.


Next Story