டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் 2 இணை உரிமையாளர்கள் நீக்கம்


டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் 2 இணை உரிமையாளர்கள் நீக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 8:20 PM GMT)

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் 2 இணை உரிமையாளர்களை நீக்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, 

8 அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இந்த போட்டி தொடரில் பங்கேற்ற சில வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக புகார் எழுந்தது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணை குழு தனது அறிக்கையை தாக்கல் செய்து இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் 2 இணை உரிமையாளர்களை நீக்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி கருத்து தெரிவிக்கையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான எந்தவொரு அணியும் இடைநீக்கமோ அல்லது தடை செய்யப்படவோ இல்லை. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் உரிமையாளர் முறையில் மாற்றம் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தோம். 

அந்த அணியின் முக்கிய பங்குதாரர்களாக 3 பேர் இருந்தனர். அதில் 2 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனிமேல் அணியின் முதன்மை உரிமையாளர் செல்வகுமார் எல்லாவற்றையும் நிர்வகிப்பார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story