‘தொடரை கைப்பற்றியது திருமண நாள் பரிசு’ இந்திய கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி


‘தொடரை கைப்பற்றியது திருமண நாள் பரிசு’ இந்திய கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Dec 2019 11:55 PM GMT (Updated: 12 Dec 2019 11:55 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியதை தனது திருமண நாள் பரிசாக கருதுகிறேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மும்பை,

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் (91 ரன்), துணை கேப்டன் ரோகித் சர்மா (71 ரன்), கேப்டன் விராட் கோலி (29 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 70 ரன்) ஆகியோரின் சரவெடி ஜாலத்தின் உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெறுவது குறித்து நிறைய பேசி விட்டோம். களத்தில் இறங்கி திட்டங்களை செயல்படுத்துவது தான் முக்கியம். எனது பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்க வாய்ப்பாக இந்த போட்டி அமைந்தது. நான் லோகேஷ் ராகுலிடம், ‘நீ கடைசிவரை நின்று விளையாடு, நான் இன்னொரு பக்கம் அதிரடி ஷாட்டுகளை வெளிப்படுத்துகிறேன்’ என்று கூறி, அதன்படியே விளையாடினேன். என்னால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ரன் குவிக்க முடியும். எல்லாமே மனம் கவனம் செலுத்துவதில் தான் அடங்கி இருக்கிறது. அணியில் எனது பங்களிப்பு முக்கியமானது. நான் இரண்டு விதமாகவும் விளையாட வேண்டும். அதாவது தேவையான நேரத்தில் எதிரணியின் பந்து வீச்சை இது போன்று நொறுக்கவும் வேண்டும்.

ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் மெச்சும்படி விளையாடினர். வழக்கமாக முதலில் பேட் செய்யும் போது, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடுவதா? வேண்டாமா? என்ற தயக்கம் இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்தில் அந்த தயக்கம் இல்லை. களத்தில் இருவரும் தெளிவாக ஆடினர். ஆடுகளமும் பேட்டிங்குக்கு ஏதுவாக இருந்தது’ என்றார்.

விராட் கோலி மேலும் கூறுகையில், ‘இன்னொரு வகையில் இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. எனக்கு திருமணமாகி இன்றுடன் (நேற்று முன்தினம்) இரண்டு ஆண்டு ஆகிறது. தொடரை வென்றது எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு நான் வழங்கும் திருமண நாள் சிறப்பு பரிசாகும். நான் விளையாடியதில் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. அந்த வகையில் இது மறக்க முடியாத இரவாகும்’ என்றார்.

உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தழுவிய 61-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை கண்டுள்ள இலங்கையின் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், ‘இந்தியா 240 ரன்கள் குவித்தது. நாங்கள் நினைத்த மாதிரி எங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம். இந்த இலக்கை எட்டி விடலாம் என்று நம்பினோம். ஏனெனில் இதற்கு முன்பு நாங்கள் மெகா ஸ்கோரை வெற்றிகரமாக விரட்டிபிடித்திருக்கிறோம். 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன் இலக்கை சேசிங் செய்திருந்தது. அதனால் இது தொட முடியாத இலக்கு அல்ல. ஆனால் காயத்தால் இவின் லீவிஸ் ஆட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. அது போல் எங்களது திட்டமிடலை சரியாக நிறைவேற்ற முடியவில்லை. இதில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

மற்றபடி ஒரு பேட்டிங் குழுவாக இந்த தொடர் முழுவதும் நாங்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இதை சாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டு, சரியான பாதையில் பயணிப்பதாக கருதுகிறேன். 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இருக்கிறது. அதில் சாதிப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்’ என்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 20 ஓவர் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 685 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 2 அரைசதங்களுடன் தொடர்நாயகன் விருதை பெற்றதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் கோலி ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் விளாசிய மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 9-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 810 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். ரோகித் சர்மா 9-வது இடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 19 இடங்கள் உயர்ந்து 14-வது இடத்தையும், தீபக் சாஹர் 22 இடங்கள் எகிறி 21-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக (பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், மாலையில் இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

Next Story