உலக கோப்பை தோல்விக்கு “நியூசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை” இந்திய கேப்டன் கோலி பேட்டி


உலக கோப்பை தோல்விக்கு “நியூசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை” இந்திய கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2020 11:01 PM GMT (Updated: 23 Jan 2020 11:01 PM GMT)

‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்விக்காக நியூசிலாந்தை பழிவாங்கும் எண்ணம் இல்லை’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆஸ்திரேலிய தொடர் முடிந்த 5 நாட்களிலேயே நியூசிலாந்து போட்டித் தொடர் தொடங்குவதை விமர்சனம் செய்தார்.

“போகிற போக்கை பார்த்தால், விமானத்தில் இருந்து நேராக மைதானத்தில் இறங்கி, உடனடியாக போட்டியில் விளையாடச் சொல்வார்கள் போலும். அத்தகைய காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவ்விரு தொடர்களுக்கு இடைவெளி குறைந்துள்ளது.

இது போன்ற இடங்களுக்கு (நியூசிலாந்து) பயணிக்கும் போது, அதுவும் நேர வித்தியாசத்தில் நம்மை விட 7½ மணி நேரம் முன்பாக உள்ள நாட்டுக்கு சென்று உடனடியாக அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தயாராவது என்பது எப்போதும் கடினம். வருங்கால தொடர்களின் போது இத்தகைய விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இந்த தொடரை எடுத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோலி, ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உலக கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்காக நியூசிலாந்தை பழிவாங்கும் எண்ணம் இல்லை. பழிதீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும் கூட, மென்மையான நியூசிலாந்து வீரர்களை பார்த்ததும் அந்த எண்ணமே வராது. நியூசிலாந்து வீரர்களுடன் எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. நான் ஏற்கனவே இங்கிலாந்தில் சொன்னது போல், அனேகமாக சர்வதேச அளவில் விளையாடுவதற்கு முன்னுதாரணமாக திகழும் ஒரு அணியாக நியூசிலாந்து உள்ளது. அவர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். உலக கோப்பை போட்டியில் அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

எது எப்படி என்றாலும் களத்தில் கடும் போட்டி அளிப்பதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. நியூசிலாந்து அணியை அவர்களது இடத்தில் வீழ்த்துவது மிகவும் சவாலானது. எனவே நாங்கள் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.’ என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து படுதோல்வி அடைந்ததால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் கேப்டன்ஷிப் மீது கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு கோலி பதில் அளிக்கும் போது, ‘போட்டியின் முடிவுகளை வைத்து கேப்டன்ஷிப்பை மதிப்பிடக்கூடாது. எவ்வாறு அணியை ஒருங்கிணைத்து செல்கிறார்கள், அவரது தலைமையில் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து தான் கேப்டன்ஷிப் அமையும். அந்த பணியை வில்லியம்சன் அருமையாக செய்து வருகிறார். நியூசிலாந்து வீரர்கள் அவர் மீது மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். வில்லியம்சன், சாதுர்யமான ஒரு கிரிக்கெட் வீரர். தோல்வியை சந்திக்கும் போது ஒட்டுமொத்த அணியும் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, கேப்டனை மட்டும் குறை சொல்லக்கூடாது’ என்றார்.

‘லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியில் சிறப்பாக செயல்பட்டு, ரன்னும் குவிக்கும் போது ஏன் அதை தொடரக்கூடாது. அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிகிறது. யாரிடம் இருந்து எதையும் பறிக்கவில்லை. அணியின் சிறந்த கலவைக்காக இதை செய்கிறோம். அணிக்கு என்ன தேவையோ அதை எப்போதும் செய்ய தயாராக இருப்பவர், ராகுல்.’ என்றும் கோலி குறிப்பிட்டார்.

Next Story