இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - ராஸ் டெய்லர்


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - ராஸ் டெய்லர்
x
தினத்தந்தி 6 Feb 2020 12:06 AM GMT (Updated: 7 Feb 2020 7:16 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்


* ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மற்றும் சீன வீரர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சினை இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண்சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘ஆசிய மல்யுத்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சீனா வீரர்கள் பங்கேற்பது குறித்து மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். சீனா, பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டினரும் இந்த போட்டியில் பங்கேற்க எந்தவித பிரச்சினையும் இல்லை. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அந்த நாட்டு வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

* இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் விடுமுறையில் சென்று விட்டார். இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினை குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் கருத்து தெரிவிக்கையில், ‘தலைமை பயிற்சியாளர் விடுமுறையில் செல்வது குறித்து 6 மாதங்களுக்கு முன்பே அனுமதி பெற்றுள்ளார். பணிச்சுமையை சமாளிக்க விடுமுறையில் செல்வதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது’ என்றார்.

* இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை இழந்த பிறகு பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகளை இழந்த போது முந்தைய தோல்வியின் தாக்கம் லேசாக மனதில் எழுந்தது. எங்களது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணியை விட ஒருநாள் போட்டி அணி நெருக்கடியை நன்றாக கையாண்டது. இந்த போட்டியில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து இருந்தால் இலக்கை எட்டிப்பிடிப்பது கடினமானதாக இருந்து இருக்கும்’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடுகையில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நான் 3 முதல் 5 வரிசைக்குள் மாறி, மாறி விளையாடி வருகிறேன். அது நான் 4-வது வரிசையில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கிறது. நான் விளையாடிய இன்னிங்ஸ் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து இருந்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். எல்லோருக்கும் மோசமான நாள் அமைய தான் செய்யும். இந்திய அணியின் பீல்டிங் நன்றாகவே இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரான மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 38 வயதான அவிஷேக் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

* 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று பகல் 1.30 மணிக்கு போட்செஸ்ட்ரூமில் நடக்கும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story