ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:53 PM GMT (Updated: 28 Feb 2020 11:53 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று தொடங்க உள்ளன.

ராஜ்கோட்,

86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று மற்றும் கால்இறுதி ஆட்டம் முடிவில் முன்னாள் சாம்பின்களான குஜராத், பெங்கால், கர்நாடகா மற்றும் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த சவுராஷ்டிரா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. அரைஇறுதி ஆட்டங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. ராஜ்கோட்டில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் குஜராத்-சவுராஷ்டிரா அணிகள் (காலை 9.30 மணி) மோதுகின்றன. ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி பந்து வீச்சில் வலுவாக உள்ளது. ஆனால் அந்த அணியின் பேட்டிங் மெச்சும் வகையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். புஜாரா இல்லாதது அந்த அணிக்கு இழப்பாகும். பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. அந்த அணி கால்இறுதியில் 464 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை ஊதி தள்ளியது. எனவே இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்பு உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் பெங்கால்-கர்நாடகா அணிகள் (காலை 9.15 மணி) சந்திக்கின்றன. கருண்நாயர் தலைமையிலான கர்நாடக அணிக்கு லோகேஷ் ராகுல் திரும்பி இருக்கிறார். அத்துடன் மனிஷ் பாண்டே, சிறந்த பந்து வீச்சாளர்களான கிருஷ்ணப்பா கவுதம், அபிமன்யு மிதுன் ஆகியோரும் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். எனவே பலம் வாய்ந்த கர்நாடக அணி, பெங்காலுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டியில் முதல்முறையாக நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்தப்படுகிறது. இதன்படி ஒரு இன்னிங்சில் ஒவ்வொரு அணியும் 4 முறை அப்பீல் செய்ய முடியும்.


Next Story