கொரோனா வைரஸ் அச்சம்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் - சவுரவ் கங்குலி பேட்டி


கொரோனா வைரஸ் அச்சம்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் - சவுரவ் கங்குலி பேட்டி
x
தினத்தந்தி 7 March 2020 2:44 AM GMT (Updated: 7 March 2020 2:44 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

சீனாவில் உருவான ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு 30-ஐ தாண்டிவிட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி தொடங்கி மே 24-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகளுக்கு அயல்நாட்டு பயிற்சியாளர்களே உள்ளனர். கொரோனா பீதி காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்ட நாளில் தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை திட்டமிட்ட நாளில் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் பாதிப்பின்றி நடக்கின்றன. இங்கிலாந்து அணி இலங்கைக்கு சென்றுள்ளது. தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறது. உலகம் முழுவதும் பல நாட்டு வீரர்கள் கவுண்டி போட்டியில் ஆடுகிறார்கள். எனவே கிரிக்கெட் போட்டிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அதே சமயம் ஐ.பி.எல். போட்டியின் போது வீரர்கள், ரசிகர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதில் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று எனக்கு தெரியவில்லை. இது பற்றி எங்களது மருத்துவ குழுவினர் எங்களிடம் தெரிவிப்பார்கள். எங்களது மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரிகளுடன் தொடர்பில் உள்ளனர். எனவே டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம்’ என்றார்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ள முன்எச்சரிக்கை வழிகாட்டுதலை பின்பற்றுவோம். இந்த வழிகாட்டுதல் குறிப்புகளை கிரிக்கெட் வீரர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள் தங்கும் ஓட்டல், விமானங்கள், ஒளிபரப்புதாரர்கள் என்று ஐ.பி.எல். போட்டி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

போட்டிகளின் போது உற்சாக மிகுதியில் வீரர்கள் ரசிகர்களுடன் கைகுலுக்குவதையோ அல்லது அவர்களுடன் புகைப்படம் எடுப்பதையோ தவிர்க்கும்படி கிரிக்கெட் வாரியம் அறிவுரை வழங்க உள்ளது.

Next Story