கிரிக்கெட்

மக்கள் கூடுவதை தவிர்க்கும்படி மத்திய அரசு உத்தரவு: பார்வையாளர் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட்? + "||" + Central government directive IPL without viewer Cricket

மக்கள் கூடுவதை தவிர்க்கும்படி மத்திய அரசு உத்தரவு: பார்வையாளர் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட்?

மக்கள் கூடுவதை தவிர்க்கும்படி மத்திய அரசு உத்தரவு: பார்வையாளர் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட்?
மத்திய அரசாங்கத்தின் உத்தரவு எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 4,200-க்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. இதையொட்டி பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கொரோனா பீதி விளையாட்டு போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. இந்திய ஓபன் கோல்ப், பெடரேசன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகளம், கொல்கத்தாவில் நடக்க இருந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று, டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை பல்வேறு நகரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே மராட்டியம், கர்நாடக மாநில அரசுகள் ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் அதிரடிக்கு எப்போதும் ஏகோபித்த வரவேற்பு உண்டு. போட்டியை 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரில் பார்ப்பார்கள். போட்டியை காண வரும் ரசிகர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் அவர் மூலம் அடுத்தவர்களுக்கு எளிதில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இதையடுத்து ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட எல்லா தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கும் இத்தகைய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை நாங்கள் தடுக்கவில்லை. ரசிகர்கள் பட்டாளம் திரள்வதை தவிர்க்கும்படி கூறியுள்ளோம். நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம்.

விளையாடுவதற்கு நாங்கள் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால் மக்களின் நலன் கருதி நாங்கள் வழங்கும் வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். போட்டியை நடத்த வேண்டும் என்று விரும்பினால், உரிய மருத்துவ பரிசோதனை வசதிகள் இருப்பதை போட்டி அமைப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடத்த முடியாது.

ஐ.பி.எல். போட்டியை நிறுத்தும்படி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. திட்டமிட்டபடி போட்டியை நடத்தினால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று தான் சொல்கிறோம். மக்களின் உடல்நலனுக்கு எந்த வகையிலும் ஆபத்து வந்து விடக்கூடாது’ என்றார்.

இதற்கிடையே ஏப்ரல் 15-ந்தேததி வரை வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு பெரும்பாலான பிரிவுகளில் விசா வழங்குவதை நிறுத்தும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.-ல் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. ‘வெளிநாட்டு வீரர்கள் ‘பிசினஸ் விசா’வின் கீழ் தான் இந்தியாவுக்கு வந்து ஐ.பி.எல்.-ல் ஆடுகிறார்கள். அரசாங்கத்தின் உத்தரவுப்படி அவர்கள் ஏப்ரல் 15-ந்தேதி வரை இந்தியாவுக்கு வர முடியாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் இல்லாத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தெளிவாக சுட்டிகாட்டியிருப்பதால் இப்போதைக்கு பார்வையாளர் இன்றி, ஆரவாரம் இன்றி, வெறிச்சோடிய மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு மும்பையில் நாளை கூடி ஆலோசிக்க உள்ளது. இதில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்பது தெரிய வரும்.