கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’ + "||" + Saurashtra team champion in Ranchi cricket

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.
ராஜ்கோட், 

86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் மோதிய இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அர்பித் வசவதா 106 ரன்னும், புஜாரா 66 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து இருந்தது. அனுஸ்டப் மஜூம்தார் 58 ரன்னுடனும், அர்னாப் நந்தி 28 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய அனுஸ்டப் மஜூம்தார் (63 ரன்) இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அந்த ஓவரிலேயே ஆகாஷ் தீப் (0) ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். பின்னர் இஷான் போரெல் (1 ரன்) விக்கெட்டையும் ஜெய்தேவ் உனட்கட் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். அவரது நேர்த்தியான செயல்பாட்டால் ஆட்டம் சவுராஷ்டிரா அணிக்கு சாதகமாக திரும்பியது.

பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 161 ஓவர்களில் 381 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 27 ரன்கள் எடுத்து அந்த அணி எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்தது. அர்னாப் நந்தி 40 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி தரப்பில் தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட், மன்கட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து இருந்த போது, ஆட்டம் ‘டிரா’வில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி வீரர் அர்பித் வசவதா ஆட்டநாயகன் விருது பெற்றார். 14-வது முறையாக இறுதிசுற்றுக்கு வந்த பெங்கால் அணி 12-வது தடவையாக கோப்பையை கோட்டை விட்டுள்ளது.

சவுராஷ்டிரா அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனட்கட் இந்த சீசனில் மொத்தம் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், ரஞ்சி போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சவுராஷ்டிரா முன்பு நவநகர், மேற்கு இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைந்த அணியாக இருந்த போது முறையே 1936-37 மற்றும் 1943-44-ம் ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

ஆனால் 1950-51-ம் ஆண்டு முதல், சவுராஷ்டிரா என்ற பெயரில் தனி அணியாக உருவெடுத்த பிறகு அந்த அணி ரஞ்சி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.

வெற்றிக்கு பிறகு சவுராஷ்டிரா கேப்டன் 28 வயதான ஜெய்தேவ் உனட்கட் கூறுகையில் ‘இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் நாங்கள் விரைவில் கோப்பையை வெல்வோம் என்று கடந்த ஆண்டு நான் சொன்ன வார்த்தை இன்னும் நினைவில் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் ஆடிய 4-வது இறுதிப்போட்டி இதுவாகும். இது நாங்கள் எந்த மாதிரியான ஆட்டத்தை விளையாடி வருகிறோம் என்பதை எடுத்து காட்டுகிறது. எங்கள் அணியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களின் சாதனையை அனுபவித்து விளையாடுகிறோம். நல்ல புரிந்துணர்வு உள்ளது. இது சிறப்பான ஒரு சாதனை. இந்த அணியில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, முந்தைய சீசன்களில் விளையாடிய வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அனுஸ்டப் மஜூம்தார் விக்கெட்டை வீழ்த்திய பந்தை இந்த சீசனின் சிறந்த பந்து வீச்சாக கருதுகிறேன்’ என்றார்.

‘இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளேன். அந்த உத்வேகம் முன்பை விட இப்போது அதிகரித்துள்ளது’ என்றும் உனட்கட் குறிப்பிட்டார்.