தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது


தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது
x
தினத்தந்தி 16 March 2020 11:15 PM GMT (Updated: 16 March 2020 9:17 PM GMT)

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது.

கொல்கத்தா,

இரு அணிகளுக்கும் இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 2 ஆட்டங்கள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தனர். பின்னர் இந்த போட்டி தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் லக்னோவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். கொரோனா வைரஸ் பயத்தால் அவர்கள் எங்கும் வெளியில் செல்லவில்லை. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் நேற்று கொல்கத்தா வரவழைக்கப்பட்டு, அங்கு விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டலில் மருத்துவ குழுவினரும் தங்கி இருந்து அவர்களை கவனித்து வருகின்றனர். வீரர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வீரர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணி இன்று காலை கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் துபாய் வழியாக தென்ஆப்பிரிக்காவுக்கு செல்கிறது.

Next Story