கொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா? - பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி


கொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா? - பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி
x
தினத்தந்தி 17 March 2020 11:52 PM GMT (Updated: 17 March 2020 11:52 PM GMT)

கொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

லண்டன்,

பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லீக் சுற்றோடு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. அதற்கு முன்பாகவே கொரோனா அச்சத்தால் பெரும்பாலான வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்குக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தனர். தாயகம் திரும்பியவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹாலெஸ், ஜாசன் ராய், டைமல் மில்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஜேம்ஸ் வின்ஸ் உள்ளிட்டோரும் அடங்கும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கு மட்டும் கொரோனா அறிகுறி தென்பட்டது. அவரது பெயர் அலெக்ஸ் ஹாலெஸ் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமிஸ் ராஜா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த வீரரின் பெயரை வெளியிட மறுத்த நிலையில், ரமிஸ் ராஜா ரகசியத்தை கசிய விட்டு விட்டார்.

இதற்கு பதில் அளித்து 31 வயதான அலெக்ஸ் ஹாலெஸ் கூறுகையில் ‘கடந்த சனிக்கிழமை அதிகாலை தாயகம் திரும்பிய போது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். வைரஸ் பாதிப்புக்குரிய அறிகுறி எதுவும் இல்லை. மறுநாள் காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியான இருமல் இருந்ததால் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மற்றவர்களுடன் பழகுவதை தவிர்த்து என்னைநானே தனிமைப்படுத்திக் கொண்டேன். இப்போதைக்கு நான் கொரோனா இருக்கிறதா என்பது குறித்து பரிசோதித்துக் கொள்ள வாய்ப்பில்லை. என்னை பற்றி தவறான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். இது மோசமான நடத்தை’ என்றார்.


Next Story