ஸ்டீவன் சுமித்துக்கு விதிக்கப்பட்ட ‘கேப்டன்ஷிப்’ தடை முடிவுக்கு வந்தது


ஸ்டீவன் சுமித்துக்கு விதிக்கப்பட்ட ‘கேப்டன்ஷிப்’ தடை முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 30 March 2020 12:42 AM GMT (Updated: 30 March 2020 12:42 AM GMT)

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 2 ஆண்டுகள் கேப்டன் பதவி வகிக்க ஸ்டீவன் சுமித்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்துள்ளது.

சிட்னி, 

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை உப்புத்தாள் கொண்டு தேய்த்து சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், இளம் வீரர் பான்கிராப்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது. சுமித்தின் கேப்டன் பதவியும் பறிபோனது. தடை காலம் முடிந்து மூன்று பேரும் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பி விளையாடி வருகிறார்கள்.

இந்த நடவடிக்கையின் போது ஸ்டீவன் சுமித்துக்கு 2 ஆண்டுகள் கேப்டன் பதவி எதுவும் வழங்கப்படாது என்றும், பந்தை சேதப்படுத்தும் திட்டத்துக்கு சூத்ரதாரியாக செயல்பட்ட வார்னருக்கு எந்த காலத்துக்கும் கேப்டன் பதவி கொடுக்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஸ்டீவன் சுமித்துக்கு கேப்டன் பதவி வகிக்க விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை ஏற்க முடியும்.

உலகின் ‘நம்பர் ஒன்’ டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவன் சுமித்துக்கு உடனடியாக கேப்டன் பதவி கிடைப்பது சந்தேகம் தான். தற்போது ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் கேப்டனான 35 வயதான டிம் பெய்னும் தனது இடத்தை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். அனேகமாக அடுத்த ஆண்டில் சுமித் டெஸ்ட் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கொரோனா பீதியால் எந்தவித கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் 30 வயதான ஸ்டீவன் சுமித் இதுகுறித்து கூறுகையில், ‘இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றவில்லை. இன்னும் சில தினங்களில் ஆலோசனை நடத்தி ஐ.பி.எல். குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இருப்பினும் ஏதாவது ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கினால் அதற்கு புத்துணர்ச்சியுடன் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். தினமும் 10 கிலோமீட்டர் ஓடுகிறேன். கித்தார் இசைக்கவும் பழகுகிறேன்’ என்றார்.

Next Story