இந்தியாவுக்கு ஐபிஎல் அவசியம் ஏன்? முன்னாள் வீரர் காம்பிர் விளக்கம்


இந்தியாவுக்கு ஐபிஎல் அவசியம் ஏன்?  முன்னாள் வீரர் காம்பிர் விளக்கம்
x
தினத்தந்தி 6 May 2020 6:22 AM GMT (Updated: 6 May 2020 7:12 AM GMT)

இந்தியாவுக்கு ஐபிஎல் அவசியம் ஏன்? என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான காம்பிர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க இருந்த 13வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா பரவல் காரணமாக, காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்வதால் இத்தொடர் நடப்பது சந்தேகம் தான் எனத் தெரிகிறது.இதுகுறித்து கோல்கட்டா அணிக்கு இரண்டு கோப்பை பெற்று தந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், பாஜக எம்.பியுமான காம்பிர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த சூழ்நிலையும் மக்களுக்கு கடினமாக மாறி விட்டன. 

நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டு மக்களின் மனஉறுதி சற்று குலைந்து போயுள்ளன. எது முக்கியம் ஒரு அரசியல்வாதி என்ற முறையில் என்னிடம் கேட்டால், மக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம் என்பேன். எனினும் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையையும் மாற்றுவது தான் இப்போதைக்கு சிறந்த வழி என கருதுகிறேன். 

இதற்கு ஐ.பி.எல்., தொடர் நடத்தப்பட வேண்டும். இதைவிட வேறு சிறந்த வழி எதுவும் இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல்., முக்கியமா என எல்லோரும் கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் ஐ.பி.எல்., நடத்தப்பட்டால் எந்த அணி கோப்பை வெல்கிறது, எந்த அணி தோற்கிறது என்று பார்க்க மாட்டார்கள். ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை மாற்றியதாகத் தான் இத்தொடரை பார்ப்பர். 

கட்டாயம் வேண்டும். தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த உலகமும் நின்று விட்டது. நம்மைச் சுற்றிலும் தவறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் மக்கள் ஐ.பி.எல்., தொடரை பார்க்கத் துவங்கி விட்டால், அனைத்து சூழ்நிலையும் மாறி விடும்.

 கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஐ.பி.எல்., தொடர்களை காட்டிலும், இந்த ஆண்டு தொடர் நடப்பது மிக முக்கியம் என கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story