அடுத்த வாரம் முதல் பயிற்சிக்கு திரும்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்


அடுத்த வாரம் முதல் பயிற்சிக்கு திரும்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்
x
தினத்தந்தி 15 May 2020 7:29 AM GMT (Updated: 2020-05-15T12:59:32+05:30)

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அடுத்த வாரம் முதல் பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஈடுபடவுள்ளார்கள்.

லண்டன்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத்  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.  தி ஹண்ட்ரெட் போட்டியை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

ஆனால் சில அறிவிப்புகளால் இங்கிலாந்து கிரிக்கெட் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த ஓர் அறிவிப்பில், ஜூன் 1 முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கொரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்குத் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்தின் ஏழு விளையாட்டு மையங்களில் டெஸ்ட் தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வீரர்கள் தேர்வு செய்யவுள்ளார்கள். அடுத்த வாரம் புதன்கிழமை முதல் தனிப்பட்ட முறையில் வீரர்கள் பயிற்சியை ஆரம்பிப்பார்கள். 

அனைத்து வீரர்களும் பங்கேற்கும் முழு வலைப்பயிற்சி இரு வாரங்களுக்குப் பிறகு தொடங்கும். இந்த நடைமுறையில் வீரர்களின் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story