விளையாட்டு துளிகள்.....


விளையாட்டு துளிகள்.....
x
தினத்தந்தி 22 May 2020 9:30 PM GMT (Updated: 22 May 2020 6:49 PM GMT)

விளையாட்டு துளிகள்.....

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரு தொடருக்கு முன்பாக வீரர்கள் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதாவது முறையான மருத்துவ பரிசோதனையுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். அணியுடன் சிறப்பு மருத்துவ அதிகாரி இருக்க வேண்டும்,பந்தை கையாளும் போது நடுவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்டவை முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது.

* ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட ஒப்புக் கொண்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. ‘கொரோனா பீதியால் தென்ஆப்பிரிக்க அணியின் இந்திய பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்ட போது வாய்ப்பு இருந்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட முயற்சி எடுப்போம் என்று அவர்களிடம் கூறியிருந்தோம். ஆனால் ஆகஸ்டு மாதம் சென்று விளையாடுவது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.

* ‘தற்போதைய காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே முன்னணி வீரர்களுக்கு கணிசமான ஊதியம் வழங்கும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியை காட்டிலும் உள்ளூர் முதல்தர போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் வலியுறுத்தியுள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போதைய உலகில் எதற்கும் உறுதி அளிக்க முடியாத நிலை உள்ளது என்று நான் நினைக்கிறேன். அதனால் இந்திய கிரிக்கெட் அணி எங்கள் நாட்டுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது (நவம்பர் முதல் ஜனவரி வரை) குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் தொடர் நடப்பதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. சூழ்நிலை மாற்றத்தால் ரசிகர்கள் கூட்டம் அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து யாருக்கு தெரியும். ஆனால் இந்திய தொடருக்கு ரசிகர்கள் இல்லை என்றால் அது ஆச்சரியம் தான்’ என்றார்

Next Story