டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்


டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்
x
தினத்தந்தி 27 May 2020 10:02 AM GMT (Updated: 27 May 2020 10:02 AM GMT)

ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும் போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பந்து மீது எச்சிலை தேய்க்கக்கூடாது. கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டி தொடருக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மாதத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.


Next Story