‘பந்தை எச்சிலால் தேய்ப்பதில் ஆபத்து இல்லை’ - பொல்லாக் சொல்கிறார்


‘பந்தை எச்சிலால் தேய்ப்பதில் ஆபத்து இல்லை’ - பொல்லாக் சொல்கிறார்
x
தினத்தந்தி 7 Jun 2020 11:55 PM GMT (Updated: 7 Jun 2020 11:55 PM GMT)

மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் போது ‘பந்தை எச்சிலால் தேய்ப்பதில் ஆபத்து இல்லை’ என்று பொல்லாக் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க், 

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலால் தேய்ப்பதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்காவிட்டால் களத்தில் ‘ஸ்விங்’ செய்ய முடியாது. இதனால் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி விடும். தங்களது நிலைமை பெரும் திண்டாட்டம் தான் என்று பந்து வீச்சாளர்கள் புலம்புகிறார்கள். இந்த நிலையில் எச்சிலை பயன்படுத்துவது குறித்து தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் பொல்லாக் அளித்த ஒரு பேட்டியில், ‘மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உயரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. இதன் மூலம் உருவாகும் சூழல் எப்படிப்பட்டது என்றால் கிட்டத்தட்ட ஒரு நீர் குமிழியில் அடைப்பட்டு இருப்பது போன்று இருக்கும். 

அதாவது போட்டியில் சம்பந்தப்பட்ட அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள். போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவரும் 2 வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களது உடல்நிலையில் மாற்றம் ஏதும் இருக்கிறதா என்பது கண்காணிக்கப்படும். யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லாவிட்டால் பந்தை எச்சிலால் தேய்ப்பதில் எந்த ஆபத்தும் இருக்காது. நீங்கள் அனைவரும் ஒரு குமிழி போன்ற வளையத்துக்குள் இருக்கப்போகிறீர்கள். கொரோனா பாதித்த நபர்கள் யாரும் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை. அதனால் பந்தை எச்சிலால் தேய்ப்பது போன்ற வழக்கமான யுக்திகளை போட்டிகளில் தொடரலாம்’ என்றார்.

Next Story