‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’ கங்குலி தகவல்


‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’ கங்குலி தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2020 11:30 PM GMT (Updated: 11 Jun 2020 7:05 PM GMT)

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் இன்றி நடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. ஆனால் திடீரென விசுவரூபம் எடுத்த கொரோனா வைரசின் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். போட்டி ரத்தானால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பதால் அதை நடத்துவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இப்போதைக்கு சர்வதேச போட்டிகள் இல்லாததால் ஐ.பி.எல்.-ல் கால்பதிக்க வெளிநாட்டு வீரர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இ-மெயில் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர், ‘இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்துவதற்குரிய எல்லாவிதமான சாத்தியகூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். இதில் ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் போட்டியை நடத்தும் திட்டம் கூட அடங்கும். ரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்புதாரர்கள், விளம்பரதாரர்கள் என சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை காண ஆவலுடன் உள்ளனர். இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். நாங்களும் இதை நடத்த முடியும் என்று நம்புகிறோம். ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்த முடிவை விரைவில் எடுப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் நேற்று கூறுகையில், ‘செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்தும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளோம். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஐ.சி.சி. எடுக்கும் முடிவை பொறுத்தே இது அமையும். எனவே ஐ.சி.சி.யின் முடிவுக்காக காத்திருக்கிறோம். 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்காவிட்டால், அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த முடியும்.

ஐ.பி.எல். உலகின் மிகப்பெரிய போட்டித் தொடர்களில் ஒன்று. அதை இந்த ஆண்டில் நடத்த விரும்புகிறோம். தேவைப்பட்டால் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவும் தயாராக இருக்கிறோம். தற்போது கால்பந்து லீக் போட்டிகள் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானங்களில் தான் நடக்கின்றன. உலக கோப்பை போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்த முடியாது. ஏனெனில் அது வேறு விதமான போட்டி. ஐ.பி.எல். வேறு விதமான போட்டி. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்துவதை விட தள்ளிவைப்பதே சிறந்தது.எங்களது திட்டமிடலின்படி ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 3 மாதம் காலஅவகாசம் உள்ளது. போட்டியை நடத்த மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். அதற்குள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள எல்லாவிதமான பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டிற்கு மாற்றுவது குறித்து இப்போதைக்கு எந்த முடிவு எடுக்க முடியாது.’ என்றார்.

இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டி உலக அளவில் புகழ்பெற்றது. தரம் தான் ஐ.பி.எல்.-ன் தனிச்சிறப்பு. எப்போது நடந்தாலும் அது வழக்கமான வடிவில் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். போட்டிகளை குறைப்பது கண்டிப்பாக கூடாது. அதே ஆட்டங்களின் எண்ணிக்கையுடன், எல்லா வீரர்களும் பங்கேற்க வேண்டும். எந்த ஒரு அணியிலும் இந்திய வீரர்கள் தான் முதுகெலும்பாக உள்ளனர். என்றாலும் வெளிநாட்டு வீரர்களும் அதன் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களால் அணி வலுப்பெறுகிறது.’ என்றார்.

Next Story