‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்களை நீக்க வேண்டும்’ - பஞ்சாப் அணி உரிமையாளர் வலியுறுத்தல்


‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்களை நீக்க வேண்டும்’ - பஞ்சாப் அணி உரிமையாளர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 July 2020 1:23 AM GMT (Updated: 1 July 2020 1:23 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்களை நீக்க வேண்டும் என்று பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

லடாக்கில் சீன ராணுவத்தினரின் எதிர்பாராத தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற கோஷம் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. ஐ.பி.எல். மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சீன நிறுவனங்கள் அளித்து வரும் ஸ்பான்சர்ஷிப்பை முறித்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை கிளம்பின. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு சீனாவை சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் தான் முதன்மை ஸ்பான்சராக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.440 கோடி வழங்கும் அந்த நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு வரை உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் குறித்து மறுபரிசீலனை செய்ய நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. இதற்கிடையே, சீனாவின் ‘டிக் டாக்’ உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா நேற்று அளித்த பேட்டியில் ‘நாட்டின் நலன் கருதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பான்சர்களாக இருக்கும் சீன நிறுவனங்களுடனான உறவை நாம் துண்டித்து கொள்ள வேண்டும். நாடு தான் முதன்மையானது. பணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இது இந்தியன் பிரிமீயர் லீக் போட்டியாகும். சீனா பிரிமீயர் லீக் போட்டி அல்ல. இந்த விஷயத்தில் நமது செயல் மற்றவர்களுக்கு உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

தொடக்கத்தில் மாற்று ஸ்பான்சர்களை கண்டறிவது கடினமாக இருக்கலாம். ஆனால் சீன ஸ்பான்சர்களுக்கு மாற்றாக போதிய அளவுக்கு இந்திய ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள். நம் நாடு, அரசு மற்றும் முக்கியமாக நமக்காக உயிரை பணயம் வைக்கும் ராணுவ வீரர்களுக்கு நாம் எல்லோரும் கண்டிப்பாக மரியாதை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த விஷயத்தில் அரசு அறிவுறுத்திய பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று காத்து இருப்பது சரியான முடிவாக இருக்காது. இந்த நேரத்தில் நாட்டுடன் இணைந்து நிற்பது நமது தார்மீக பொறுப்பாகும். நான் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தால் வரும் சீசனிலேயே ஐ.பி.எல். போட்டிக்கு இந்திய ஸ்பான்சரை கண்டறியும் படி சொல்வேன்’ என்று தெரிவித்துள்ளார். 

Next Story