வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 204 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஹோல்டர் 6 விக்கெட் வீழ்த்தினார்


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 204 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஹோல்டர் 6 விக்கெட் வீழ்த்தினார்
x
தினத்தந்தி 9 July 2020 10:45 PM GMT (Updated: 9 July 2020 7:35 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 204 ரன்னில் சுருண்டது.

சவுதம்டன்,

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா அச்சம் எதிரொலியாக உயர்மட்ட மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் இந்த போட்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். காலையில் நிலவிய மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தனர். பந்து பிட்ச் ஆனதும் நன்கு திரும்பியதால் அதை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். ஜோ டென்லி (18 ரன்), ஷனோன் கேப்ரியலின் பந்து வீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் (30 ரன்) கேப்ரியலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி வெஸ்ட் இண்டீஸ் சாதகமான தீர்ப்பை பெற்றது.

அடுத்து வந்த ஜாக் கிராவ்லி (10 ரன்), ஆலிவர் போப் (12 ரன்) ஆகியோரை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் காலி செய்தார். அப்போது இங்கிலாந்து அணி 87 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதன் பின்னர் பொறுப்பு கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்த போராடினர். ஒரு ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஸ்டோக்ஸ் ஸ்கோர் 154 ரன்களாக உயர்ந்த போது நடையை கட்டினார். ஸ்டோக்ஸ் (43 ரன், 97 பந்து, 7 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாவ்ரிச்சிடம் கேட்ச் ஆனார். இதே போல் பட்லரும் (35 ரன்) வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் டாம் பெஸ் (31 ரன்) சற்று தாக்குப்பிடித்ததால் அந்த அணி ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளும், கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 18 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 1 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது.

Next Story