டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் பென் ஸ்டோக்ஸ்


டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் பென் ஸ்டோக்ஸ்
x
தினத்தந்தி 21 July 2020 10:00 PM GMT (Updated: 21 July 2020 8:16 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

துபாய்,

மான்செஸ்டரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 6 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 176 ரன்களும், 2-வது இன்னிங்சில் அதிரடியாக 57 பந்தில் 78 ரன்களும் விளாசி மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேனுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இதே போட்டியில் முதல் இன்னிங்சில் 120 ரன்கள் எடுத்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 29 இடங்கள் எகிறி 35-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் (886 புள்ளி) நீடிக்கிறார்கள். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 5-வது இடமும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 9-வது இடமும் வகிக்கிறார்கள்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் சதம், அரைசதம், 3 முக்கியமான விக்கெட் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஸ்டோக்ஸ் அதன் மூலம் 66 புள்ளிகளை திரட்டி மொத்தம் 497 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளார். 2006-ம் ஆண்டு ஆன்ட்ரூ பிளின்டாப்புக்கு பிறகு இங்கிலாந்து வீரர் ஒருவர் ‘நம்பர்’ ஒன் ஆல்-ரவுண்டராக வலம் வருவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 2-வது இடத்துக்கு (459 புள்ளி) தள்ளப்பட்டார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் (397 புள்ளி) இருக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். வேகப்பந்து வீச்சாளர் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதனால் நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 இடங்கள் அதிகரித்து மீண்டும் டாப்-10 இடத்துக்குள் (10-வது இடம்) நுழைந்துள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 7-வது இடம் வகிக்கிறார்.

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு உலக சாம்பியன்ஷிப்புக்குரிய 40 புள்ளிகள் கிடைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இங்கிலாந்து 186 புள்ளிகளுடன் நியூசிலாந்தை (180 புள்ளி) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இந்த வகையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 40 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

Next Story