இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்னில் சுருண்டது


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்னில் சுருண்டது
x
தினத்தந்தி 27 July 2020 12:26 AM GMT (Updated: 27 July 2020 12:26 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்னில் சுருண்டது.

மான்செஸ்டர், 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் 46 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 37 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 65 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 14 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இன்னிங்சில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் சாய்ப்பது இது 18-வது முறையாகும்.

அடுத்து 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் அருமையான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். உள்ளூரில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இங்கிலாந்து தொடக்க ஜோடி என்ற பெருமையை பர்ன்ஸ்-சிப்லி பெற்றனர். அணியின் ஸ்கோர் 114 ரன்களை எட்டிய போது சிப்லி (56 ரன்) எல்.பி.டபிள்யூ.ஆனார்.

ரோரி பர்ன்ஸ் தனது பங்குக்கு 90 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அப்போது கேப்டன் ஜோ ரூட் 68 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


Next Story