கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: 329 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து + "||" + Last one day cricket Chasing the 329-run target Ireland shocked England

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: 329 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: 329 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 329 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
சவுதம்டன், 

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 328 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 44 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறிய அந்த அணி கேப்டன் இயான் மோர்கன் (106 ரன்), டாம் பான்டன் (58 ரன்), டேவிட் வில்லி (51 ரன்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது.

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் காரெத் டெல்னி 12 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் பின்னர் கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங்குடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 95 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஸ்டிர்லிங் தனது 9-வது சதத்தை எட்டினார். ஸ்டிர்லிங் 142 ரன்னிலும் (128 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), 6-வது சதத்தை நிறைவு செய்த பால்பிர்னி 113 ரன்னிலும் (112 பந்து, 12 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 214 ரன்கள் திரட்டியது சிறப்பம்சமாகும்.

இதைத் தொடர்ந்து ஹாரி டெக்டரும், கெவின் ஓ பிரையனும் கூட்டணி அமைத்து தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தனர். அயர்லாந்து 49.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. டெக்டர் 29 ரன்னுடனும், ஓபிரையன் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய சாகிப் மக்மூத் 3-வது பந்தை புல்டாசாக வீசினார். இடுப்புக்கு மேலே வந்த அந்த பந்தை நடுவர் ‘நோ-பால்’ என்று அறிவித்தார். அது அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றியை தொடுவதை எளிதாக்கியது.

ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 328 ரன் இலக்கை எட்டியதே சிறந்த சேசிங்காக இருந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்திப்பிடித்த அதிகபட்ச ரன் இலக்கும் இது தான்.

இருப்பினும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வென்று இருந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி கூறுகையில் ‘இந்த ஆண்டில் நாங்கள் 20 ஓவர் உலக சாம்பியனை (வெஸ்ட்இண்டீசை) அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தினோம். தற்போது ஒருநாள் போட்டி சாம்பியனை தோற்கடித்து இருக்கிறோம். இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வெற்றி என்றென்றும் எங்கள் நினைவில் நிலைத்து இருக்கும். இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும்’ என்றார்.