டோனியின் நடத்தை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும் - பிரதமர் மோடி பாராட்டு


டோனியின் நடத்தை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும் - பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 21 Aug 2020 12:52 AM GMT (Updated: 21 Aug 2020 12:52 AM GMT)

‘இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் நடத்தை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும்’ என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மூன்று வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான இந்திய மூத்த கிரிக்கெட் வீரர் டோனி கடந்த 15-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஓய்வு குறித்து உங்களுக்கே (டோனி) உரிய அடக்கமான பாணியில் குறுகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது நாடு முழுவதும் உணர்ச்சிகரமான நீண்ட விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. உங்களது ஓய்வால் 130 கோடி இந்திய மக்களும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். இருப்பினும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்காக நாங்கள் எல்லோரும் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

உலக கிரிக்கெட் வரைபடத்தில் இந்தியா உயர்ந்த நிலையை எட்ட காரணமாக இருந்துள்ள உங்களது பெயர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். கடினமான தருணங்களில் நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படும் விதம், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பாணி என்றும் நினைவில் கொள்ளப்படும். குறிப்பாக 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தது தலைமுறைகளை கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். கிரிக்கெட் வெற்றி மற்றும் சாதனைகளை வைத்து மட்டுமே டோனி என்கிற பெயரை கணக்கில் எடுத்துக்கொள்வது சரியானதாக இருக்காது. உங்களது செயல்பாடுகளின் தாக்கம் தனித்துவமானது.

சிறிய நகரத்தில் எளிமையான பின்னணியுடன் தொடங்கிய நீங்கள் தேசிய அளவில் உயர்ந்து உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கினீர்கள். நாட்டுக்கு பெருமை சேர்த்தீர்கள். உங்களுடைய வளர்ச்சியும், நடத்தையும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. புதிய இந்தியா உணர்வின் முக்கிய உதாரணங்களில் நீங்களும் ஒருவர். எதை நோக்கி நாம் முன்னேறி செல்கிறோம் என்பது தெரிந்து இருக்கும் பட்சத்தில் நாம் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல. இந்த உணர்வை நிறைய இளைஞர்களுக்கு உங்களது செயல் மூலம் நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். களத்தில் உங்களது துணிச்சலான செயலை பார்த்து இளைஞர்கள் நெருக்கடியான சமயங்களில் அச்சமின்றி நேர்த்தியாக செயல்பட கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் எந்தமாதிரியான சிகை அலங்காரத்தை கொண்டு இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. வெற்றியிலும், தோல்வியிலும் நீங்கள் கடைப்பிடித்த ஒரே மாதிரியான அமைதியை ஒவ்வொரு இளைஞரும் பின்பற்ற வேண்டும் என்பதே முக்கியமான பாடமாகும். நமது ராணுவ வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தீர்கள். ராணுவ வீரர்கள் நலன் மீதான உங்களது அக்கறை பாராட்டத்தக்கது.

இனிமேல் மனைவி மற்றும் மகள் உங்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்று நம்புகிறேன். அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். அவர்களது தியாகமும், ஆதரவும் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. தொழில் ரீதியான வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் சமநிலையுடன் பேணுவது எப்படி? என்பதையும் நமது இளைஞர்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கும் டோனி டுவிட்டர் மூலம் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘கலைஞர், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் போன்றவர்கள் எப்பொழுதும் விரும்புவது அவர்களது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மக்கள் எல்லோரிடமும் இருந்து கிடைக்கும் பாராட்டுகளைத் தான். என்னை வாழ்த்தியதற்கும், பாராட்டியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story