‘ஓய்வு விஷயத்தில் டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை’ - இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சக்லைன் முஷ்டாக் குற்றச்சாட்டு


‘ஓய்வு விஷயத்தில் டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை’ - இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சக்லைன் முஷ்டாக் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Aug 2020 12:52 AM GMT (Updated: 24 Aug 2020 12:52 AM GMT)

‘ஓய்வு விஷயத்தில் டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை’ என இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சக்லைன் முஷ்டாக் குற்றம் சாட்டியுள்ளார்.

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் திடீர் ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டோனி போன்ற வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் நடத்தவில்லை. அவரது ஓய்வு இந்த மாதிரி முடிந்திருக்கக்கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன்.

நான் நினைப்பதையே அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் நினைக்கிறார்கள். நான் இவ்வாறு சொல்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் மன்னிக்க வேண்டும். ஆனால் அவர்கள் (கிரிக்கெட் வாரியம்) டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை என்பதே உண்மை. இது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தோல்வி அடைந்து விட்டது.

இந்திய அணிக்காக கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் அவர் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உயர்ந்த நிலையில் விடைபெறவேண்டும் என்றே விரும்புவார்கள். நிச்சயம் டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கும். வழியனுப்பும் போட்டி நடத்தப்படாததால் அவரது ரசிகர்களும் வருத்தத்தில் இருப்பார்கள்.

டோனி கிரிக்கெட்டில் ஒரு மாணிக்கம். உண்மையான ஹீரோ. அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் ஐ.பி.எல். போட்டியில் களம் காண இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு சக்லைன் முஷ்டாக் கூறினார்.

Next Story