விளையாட்டு துளிகள்....


விளையாட்டு துளிகள்....
x
தினத்தந்தி 24 Aug 2020 10:45 PM GMT (Updated: 24 Aug 2020 8:07 PM GMT)

விளையாட்டு துளிகள்....

விளையாட்டு துளிகள்....

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளளரும், ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருப்பவருமான ஆர்.அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில், ‘பவுலர்கள் ‘நோ-பால்’ வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு ‘பிரி ஹிட்’ வாய்ப்பு அளிக்கப்படுவது போல் பந்து வீசும் முன்பு பவுலர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு முன் நோக்கி நகர்ந்தால் பவுலருக்கு ‘பிரீ பால்’ வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த பிரீ பாலில் பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தால் பேட்டிங் செய்யும் அணியின் ஸ்கோரில் 5 ரன்களை குறைக்க வேண்டும். தற்போது பவுலர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனை சரிசெய்ய ‘பிரீ பால்’ முறை சரியானதாக இருக்கும்’ என்று யோசனை தெரிவித்துள்ளார்.

* ‘அர்ஜூனா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்திய கிரிக்கெட் வாரிய டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ‘அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அறிந்ததும், நானும் எனது குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். கடந்த 13 ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்ததற்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் இது பெருமைக்குரிய தருணமாகும். எனது மனைவி உண்மையிலேயே பெருமை அடைந்தார். அவர் நான் விருது பெற வேண்டும் என்று விரும்பினார். தற்போதைய இந்திய பவுலர்களுக்கு அணிக்கு எப்படி வெற்றியை தேடிக் கொடுக்க போகிறோம் என்பது குறித்த சிந்தனை தான் எப்பொழுதும் உள்ளது. தனிப்பட்ட சாதனை குறித்து சிந்திப்பது கிடையாது. சூழ்நிலைக்கு தகுந்தபடி எங்களது திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்று தனிமைப்படுத்தலை கடைப்பிடித்து வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர்களுக்கான வரவேற்பு கூட்டத்தில் அந்த அணியின் கேப்டன் விராட்கோலி ஆன்லைன் மூலம் உரையாடுகையில், ‘இந்த மாதிரியான (ஆன்லைன் மூலம் சந்திப்பு) முதல் அனுபவத்தை நம்பமுடியவில்லை. துபாய்க்கு நாம் பாதுகாப்பான முறையில் வந்து இருக்கிறோம். பாதுகாப்பு குறித்து நம்மிடம் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை எல்லோரும் அப்படியே கடைப்பிடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மருத்துவ உயிர் பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறையை எல்லா நேரங்களிலும் முறையாக பின்பற்ற வேண்டும். அதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. ஏனெனில் ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த போட்டியையும் நாசப்படுத்தி விடும். எனவே யாரும் பாதுகாப்பு விதிமுறையை மீறி செயல்படக்கூடாது’ என்று எச்சரித்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகருமான வி.வி.எஸ்.லட்சுமண் அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ‘ஐ.பி.எல். போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்கள் இல்லாவிட்டாலும் ஆட்டத்தின் தரத்திலும், உத்வேகத்திலும் எந்தவித குறைவும் இருக்காது. போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். அமீரக ஆடுகளங்களின் அவுட் பீல்டு அருமையாக இருக்கிறது. ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கலாம். ஆனால் மைதான ஊழியர்கள் தங்கள் முயற்சியால் ஆச்சரியம் அளிப்பார்கள் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Next Story