கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹானேவின் பேட்டிங் வரிசை எது? - அவரே அளித்த பதில் + "||" + Which is Rahane's batting line-up in Delhi Capitals? - The answer he gave himself

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹானேவின் பேட்டிங் வரிசை எது? - அவரே அளித்த பதில்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹானேவின் பேட்டிங் வரிசை எது? - அவரே அளித்த பதில்
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெல்லி அணியில் ரஹானே எந்த பேட்டிங் வரிசையில் ஆடுவார் என்பதற்கான பதிலை அவரே அளித்தார்.
துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய 32 வயதான அஜிங்யா ரஹானே, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ரஹானே தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் டெல்லி அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா உள்ளனர். அதற்கு அடுத்த வரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் ஆகியோர் ஆடுவார்கள். இதனால் ரஹானே எந்த வரிசையில் ஆடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘வெப் கான்பரன்ஸ்’ மூலம் நேற்று பேட்டி அளித்த ரஹானே இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

டெல்லி அணியில் நான் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவேன் என்பது தெரியாது. எங்களது அணியின் பயிற்சிகளை எல்லாம் முடித்த பிறகே அது பற்றி விவாதிப்போம். எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலும் தொடக்க வீரராக களம் இறங்கி உற்சாகமாக ரசித்து விளையாடி இருக்கிறேன். ஆனால் நான் எந்த வரிசையில் ஆட வேண்டும் என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. எந்த வரிசையில் ஆட சொன்னாலும் 100 சதவீதம் பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறேன். 5 அல்லது 6-வது வரிசையில் விளையாடுவதை அவர்கள் விரும்பினால், அதையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த வரிசையில் ஆடுவது புதிய அனுபவமாக இருக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 2 பீல்டர்கள் மட்டுமே வெளிவட்டத்திற்குள் நிற்கும் போது தான் (முதல் 6 ஓவர்) நாம் ஷாட்டுகளை அச்சமின்றி சுதந்திரமாக அடிக்க முடியும்.

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு, உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும், 4-வது வரிசையில் ஆடுவேன் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால் உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாததால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். மீண்டும் ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் என்னால் நன்றாக ஆட முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேட்டிங் சராசரி மற்றும் ‘ஸ்டிரைக்ரேட்’ குறித்து மக்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 2 ஆண்டுக்கு முன்பு அணியில் இருந்து நீக்குவதற்கு முன்பாக ஒரு நாள் போட்டியில் எனது செயல்பாடு நன்றாகத் தான் இருந்தது. மற்றவர்கள் சொல்வதை பற்றி கவலைப்படாமல் என் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்புவேன்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் நேற்று துபாய் வந்து சேர்ந்தார். ஓட்டலில் அவர் 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்த பிறகு வீரர்களுக்குரிய பயிற்சியை நேரில் அளிப்பார்.