கிரிக்கெட்

ஐதராபாத்துக்கு கைகொடுக்குமா அதிரடி? + "||" + Action to lend a hand to Hyderabad?

ஐதராபாத்துக்கு கைகொடுக்குமா அதிரடி?

ஐதராபாத்துக்கு கைகொடுக்குமா அதிரடி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ஐதராபாத் சன்ரைசர்ஸ் பற்றிய அலசல் தொகுப்பினை காணலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் ஐதராபாத் சன்ரைசர்சும் ஒன்று. 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்ற பிறகு ஒவ்வொரு முறையும் குறைந்தது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டியிருக்கிறது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பிறகு டேவிட் வார்னர் திரும்பிய போதிலும் கடந்த சீசனில் ஐதராபாத் அணியின் கேப்டனாக வில்லியம்சன் செயல்பட்டார். இந்த ஆண்டு வார்னர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் 2019-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து 3 ஆட்டங்களில் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அது மட்டுமின்றி பெங்களூரு அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் திரட்டி சாதனையும் படைத்தனர். இந்த சீசனிலும் இவர்கள் அபாயகரமான அதிரடி ஜோடியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களம் காண முடியும் என்பதால் வில்லியம்சனுக்கு எல்லா ஆட்டத்திலும் இடம் கிடைப்பது சந்தேகம் தான். அவ்வாறான சூழலில் மிடில் வரிசையில் விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக நம்பியிருக்க வேண்டி உள்ளது. இவர்கள் தடுமாற்றம் கண்டால் பெரிய ஸ்கோரை அடைவதில் சிக்கலாகி விடும். விராட் சிங், பிரியம் கார்க், அப்துல் சமாத் போன்ற துடிப்பான இளம் பேட்ஸ்மேன்களின் ஐ.பி.எல். பயணத்தை இனி தான் பார்த்து மதிப்பிட வேண்டும்.

ஐதராபாத் அணி என்றாலே பந்து வீச்சு தான் அவர்களின் பிரதான பலமே. பேட்ஸ்மேன்கள் கைவிட்ட பல ஆட்டங்களில் குறைந்த ஸ்கோருடன் பந்து வீச்சாளர்களின் சாமர்த்தியத்தால் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 20 ஓவர் போட்டியின் உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலரான ரஷித்கான் தனது சுழல் ஜாலத்தால் எந்த பேட்ஸ்மேனுக்கும் குடைச்சல் கொடுப்பார். ‘ஸ்விங்’ செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டர் முகமது நபி, சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், கலீல் அகமது உள்ளிட்டோரும் பவுலிங்கில் வலு சேர்க்கிறார்கள்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த அணியாக காணப்படும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டாப்-4 இடத்திற்குள் நுழைய பிரகாசமான வாய்ப்புள்ளது.

தனது தொடக்க ஆட்டத்தில் 21-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை துபாயில் சந்திக்கிறது.