‘சாம் கர்ரன் ஒரு நிறைவான கிரிக்கெட் வீரர்’ - சென்னை அணியின் கேப்டன் டோனி பாராட்டு


‘சாம் கர்ரன் ஒரு நிறைவான கிரிக்கெட் வீரர்’ - சென்னை அணியின் கேப்டன் டோனி பாராட்டு
x
தினத்தந்தி 14 Oct 2020 11:35 PM GMT (Updated: 14 Oct 2020 11:35 PM GMT)

‘ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் நிறைவான ஒரு கிரிக்கெட் வீரர்’ என்று சென்னை கேப்டன் டோனி பாராட்டினார்.

துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இதில் சென்னை நிர்ணயித்த 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களுக்குள் முடங்கி 5-வது தோல்வியை சந்தித்தது. ஆட்டம் இழக்காமல் 25 ரன்கள் (10 பந்துகளில்) சேர்த்ததுடன், ஒரு விக்கெட்டும் வீழ்த்திய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ‘20 ஓவர் போட்டி நமக்கு காட்டுவது என்னவென்றால் சில ஆட்டங்கள் நமக்கு சாதகமான வழியில் அமையாது. ஆனால் சில ஆட்டங்களில் நாம் சரியாக செயல்படாவிட்டாலும் வெற்றி கிடைத்து விடும். இந்த போட்டியில் பேட்டிங்கில் கூட நன்றாக செயல்பட்டோம். நாங்கள் எடுத்தது சவாலான ஸ்கோர் தான் என்று நினைக்கிறேன். எங்கள் பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை நன்கு கணித்து அதற்கு ஏற்ப செயல்பட்டார்கள். முதல் 6 ஓவர்களில் நாங்கள் பெற்ற தொடக்கத்தை பொறுத்து தான் 160 ரன்களுக்கு மேல் கடக்க முடிந்தது.

பந்து திடீரென எழும்பி செல்வதும், தாழ்வாக வருவதும் என்று ஆடுகளத்தன்மை இருவிதமாக காணப்பட்டது. அதனால் திட்டமிடலை சரியாக அமல்படுத்த வேண்டி இருந்தது. அதை எங்களது பவுலர்கள் சிறப்பாக செய்து முடித்தனர். சாம் கர்ரன் (தொடக்க வீரராக இறங்கி 21 பந்தில் 31 ரன் எடுத்ததுடன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்) எங்களுக்கு மனநிறைவை தரும் முழுமையான ஒரு கிரிக்கெட் வீரர். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நமக்கு தேவையாகும். அவர் சுழற்பந்து வீச்சையும் நன்கு ஆடக்கூடியவர். அவர் அளிக்கும் இது போன்ற 15-45 ரன்கள் அணியின் உத்வேகத்துக்கு உதவிடும். போக போக அவர் இறுதிகட்ட பந்து வீச்சில் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொள்வார். இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படாததால் நாங்கள் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்தினோம். ஏறக்குறைய கச்சிதமாக அமைந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது’ என்றார்.


Next Story