இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா...? முத்தையா முரளிதரன் வேதனை


இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா...? முத்தையா முரளிதரன் வேதனை
x

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க முயலுகிறார்கள். 800 திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என முத்தையா முரளிதரன் கூறி உள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள 800 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையிலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

முரளிதரனின் குழந்தைப் பருவத்தில் துவங்கி, அவரது பந்து வீசும் முறை சர்ச்சையானது, அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசுகிறது இத்திரைப்படம்.
'800' படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் கூறி உள்ளதாவது:- 

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க முயலுகிறார்கள். 800 திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள். இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா.

மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளேன். 2002ம் ஆண்டு எல்டிடிஇ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளேன்.

போர் முடிந்த பிறகு எனது அறக்கட்டளை மூலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு நான் செய்த உதவிகள் அதிகம்
எனது சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 800 திரைப்படத்தை எடுக்க சம்மதித்தேன்.

போர் முடிவுற்றதால் தான் 2009ம் ஆண்டை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன். தமிழர்களை கொன்று குவித்த நாளை நான் மகிழ்ச்சியான நாளாக கூறியதாக அவதூறு பரப்புகிறார்கள். அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை ஒரு போதும் நான் ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்
என கூறினார்


Next Story