ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐபிஎல் கிரிக்கெட்:  ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 21 Oct 2020 10:29 PM GMT (Updated: 21 Oct 2020 10:29 PM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


ராஜஸ்தான் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கிட்டும். இதே நெருக்கடி வளையத்திற்குள் தான் ஐதராபாத் அணியும் சிக்கியுள்ளது. 9 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் சந்தித்து உள்ள ஐதராபாத் அணி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க மீதமுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை ருசித்தாக வேண்டும். ஒன்றில் தோற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

ராஜஸ்தான் அணி முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. அத்துடன் ஏற்கனவே இதே மைதானத்தில் ஐதராபாத்தையும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. அதனால் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்பார்கள்.

ஐதராபாத் அணியை பொறுத்தவரை கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் நெருங்கி வந்து தோற்று இருக்கிறது. இதில் கொல்கத்தாவுக்கு எதிராக சூப்பர் ஓவரில் வீழ்ந்ததும் அடங்கும். முக்கியமான இந்த ஆட்டத்தில் இருந்து அவர்கள் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜோஸ் பட்லர், ஸ்டீவன் சுமித், பென் ஸ்டோக்ஸ் (3 பேரும் ராஜஸ்தான்), பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், வில்லியம்சன் (ஐதராபாத்) என்று இரு அணியிலும் சரிசம பலத்துடன் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அங்கம் வகிப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். முதலில் பேட் செய்து 160 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டாலே வெற்றி வாய்ப்பு அதிகரித்து விடும். அதனால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

Next Story