”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா


”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
x
தினத்தந்தி 26 Oct 2020 8:13 AM GMT (Updated: 26 Oct 2020 8:13 AM GMT)

ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் செய்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். 

அரைசதம் அடித்ததும் ஹர்திக் பாண்ட்யா, முழங்கால் இட்டு  இனவெறிக்கு எதிரான இயக்கத்திற்கு தனது ஆதரவை காட்டினார்.  ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்”  என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.   இதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற ஹேஷ்டேக்கையும் ஹர்திக் பாண்ட்யா பயன்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது நடந்த பிரச்சினையில் வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஒருவர் முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில் அந்த கருப்பு இனத்தவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். போலீஸ் அதிகாரியின் காலுக்கு அடியில் சிக்கியபடி கருப்பு இனத்தவர் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்தன.

கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் கொடூர மரணத்துக்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமியும் இனவெறிக்கு எதிராக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.  

இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின்போது இரு அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்லாமல் நடுவர்களும் ஒரு சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். 

Next Story