கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது + "||" + To Australia Will India retaliate? 2nd One Day Match Happening today

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
சிட்னி, 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சொதப்பியது. இதனால் ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்து மலைக்க வைத்து விட்டது. ஆரோன் பிஞ்சும், ஸ்டீவன் சுமித்தும் சதம் விளாசினர். இவர்களை கட்டுப்படுத்த தவறிய இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டுமே மிச்சம். ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு கூட எடுபடவில்லை. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தனர். ஹர்திக் பாண்ட்யாவும், ஷிகர் தவானும் அரைசதம் அடித்ததால் 300 ரன்களை கடக்க முடிந்தது. பேட்டிங்கில் அட்டகாசப்படுத்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்னும் பவுலிங் செய்வதற்குரிய முழு உடல்தகுதியை எட்டாதது பின்னடைவு தான். முன்னணி பவுலர்களின் பந்து வீச்சு சிதைக்கப்படும் போது பகுதி நேர பவுலர்கள் கைகொடுப்பது உண்டு. அத்தகைய வீரர்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துவதாக கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே குறைப்பட்டு கொண்டார்.

விராட் கோலி, சிட்னி மைதானத்தில் இதுவரை சாதித்ததில்லை. இங்கு 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே (சராசரி 11.40 ரன்) எடுத்துள்ளார். அந்த மோசமான அனுபவத்துக்கு முடிவுகட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் இன்னும் உற்சாகமாக களம் இறங்குவார்கள். ஆரோன் பிஞ்ச் (114 ரன்), டேவிட் வார்னர் (69 ரன்), ஸ்டீவன் சுமித் (105 ரன்) முதல் ஆட்டத்தை போன்று ஜொலிக்கும் முனைப்புடன் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆணிவேரான இவர்களை அசைத்தால் மட்டுமே அந்த அணியின் ரன்வேட்டைக்கு முட்டுக்கட்டை போட முடியும். ஹேசில்வுட்டின் (3 விக்கெட்) ஷாட்பிட்ச் பந்துகளும், ஆடம் ஜம்பாவின் (4 விக்கெட்) சுழலும் தொடக்க ஆட்டத்தில் அவர்களுக்கு பலனை தந்தன. அதே உத்வேகத்துடன் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய வீரர்களும், இந்த ஆட்டத்துடன் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இரு அணிகளிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் விலாபகுதியில் ஏற்பட்ட காயத்தால் முதல் ஆட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார். இந்த ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் லேசான தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதுகுவலியால் அவதிப்படுகிறார். இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

சிட்னி மைதானத்தில் கடைசியாக ஆடிய 8 ஆட்டங்களில் 7-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர் அல்லது டி.நடராஜன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கேமரூன் கிரீன் அல்லது சீன் அப்போட், மேக்ஸ்வெல், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.