இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்


இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்
x
தினத்தந்தி 9 Dec 2020 10:00 PM GMT (Updated: 9 Dec 2020 9:58 PM GMT)

காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

சிட்னி,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றன.

இதனை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் அரங்கேற இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் முறையே 69 மற்றும் 83 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான 34 வயது டேவிட் வார்னர் 2-வது ஒருநாள் போட்டியில் தரையில் விழுந்து பீல்டிங் செய்கையில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். இதனால் அவர் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஆடவில்லை. அவர் சிகிச்சையுடன் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக டேவிட் வார்னர் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு முழு உடல் தகுதியை எட்டாததால் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக டேவிட் வார்னர் நேற்று அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மெல்போர்னில் வருகிற 26-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பழைய நிலைக்கு திரும்ப டேவிர் வார்னர் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

இது குறித்து வார்னர் கூறுகையில், ‘எனது காயத்தின் தன்மை நன்றாக இருப்பதாகவே உணருகிறேன். ஆனால் டெஸ்ட் போட்டியில் ரன் எடுக்க வேகமாக ஓடுவதற்கும், களத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் 100 சதவீதம் தயார் என்பதை எனது மனதிற்கும், அணியினருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய திறனுடன் நான் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது என்னால் சிறப்பான உடல் தகுதியுடன் இருக்கும் போது விளையாடுவது போல் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த 10 நாட்களில் இந்த நிலைமையில் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்’ என்றார்.

வார்னர் ஆடாததால் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக யாரை களம் இறங்க வைப்பது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த தலைவலியாக மாறி இருக்கிறது. இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக ஆடிய வில் புகோவ்ஸ்கி, வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பந்து ‘ஹெல்மெட்’டில் தாக்கியதால் பாதிப்படைந்து வெளியேறினார். நாளை தொடங்கும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கும் அவர் உடல் தகுதியை பெறுவது சந்தேகம் தான். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோ பர்ன்ஸ் பயிற்சி ஆட்டத்தில் 4 ரன் மற்றும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து தடுமாறி வருகிறார். அவரை 2-வது பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் பணித்து இருக்கிறது.

Next Story