இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் டேவிட் வார்னர் ஆடமாட்டார்


இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் டேவிட் வார்னர் ஆடமாட்டார்
x
தினத்தந்தி 24 Dec 2020 12:04 AM GMT (Updated: 24 Dec 2020 12:04 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆடமாட்டார் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் (பாக்சிங் டே) கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணியினரும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் எஞ்சிய ஒருநாள் போட்டி, 20 ஓவர் தொடர் மற்றும் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. சிட்னியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கிருந்து மெல்போர்னுக்கு சென்று உடற்தகுதியை மீட்டெடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த டேவிட் வார்னர் உடல் தகுதியை எட்டுவாரா? என்பதில் சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்தும் டேவிட் வார்னர் விலகி இருக்கிறார். இதேபோல் பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட்டும் 2-வது டெஸ்டுக்கான அணியில் இடம் பிடிக்க முடியாது. இதனால் முதல் டெஸ்டில் ஆடிய ஆஸ்திரேலிய அணி மாற்றமின்றி களம் இறங்குகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘வார்னர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை. அப்போட் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். வார்னர், அப்போட் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்கு வெளியில் இருந்து காயத்துக்கு சிகிச்சை பெற்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையின் படி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இருவரும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைய முடியாது. 2-வது டெஸ்ட் போட்டிக்கு கூடுதலாக வீரர்கள் யாரையும் சேர்க்கவில்லை. 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இருவரும் அணியினருடன் இணைவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story