2022-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் மேலும் 2 அணிகள் - இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் ஒப்புதல்


2022-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் மேலும் 2 அணிகள் - இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் ஒப்புதல்
x
தினத்தந்தி 24 Dec 2020 10:32 PM GMT (Updated: 24 Dec 2020 10:32 PM GMT)

2022-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆமதாபாத்,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

முக்கிய அம்சமாக ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தபடி 2022-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2022-ம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011-ம் ஆண்டில் இந்த போட்டியில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் (அமெரிக்கா) நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எடுத்து வரும் நடவடிக்கை கிரிக்கெட்டுக்கு நல்லது தான். அதேநேரத்தில் ஒலிம்பிக்கில் சேர்வதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி அந்தஸ்துக்கு பாதகம் வருமா? என்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் சில விளக்கங்களை கேட்டு பெற்று இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு வரிவிலக்கு பெற்று தர வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விதித்து இருக்கும் விவகாரத்தில் மத்திய அரசை அணுகி வரிவிலக்கு பெற முயற்சிப்பது என்றும் அதில் வரிவிலக்கு கிடைக்காத பட்சத்தில், வரிவிலக்கு பெற முடியாமல் போனால் ஏற்படும் இழப்பு தொகையை, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆண்டுதோறும் வருவாய் பகிர்வாக ஐ.சி.சி. வழங்கும் தொகையில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.யிடம் இருந்து தனக்கு அடுத்த ஆண்டு வருமான பகிர்வு மூலம் கிடைக்கும் தொகையில் சுமார் ரூ.900 கோடியை இழக்க நேரிடலாம்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு உள்ளூர் முதல்தர போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்பட்டு இருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் உரிய இழப்பீடு தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தொகை மாநில கிரிக்கெட் சங்கங்கள் மூலம் வீரர், வீராங்கனைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் சுக்லா பதவி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஐ.பி.எல். சேர்மனாக பிரிஜேஷ் பட்டேல் தொடர அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஐ.சி.சி.யின் இயக்குனராக கங்குலி நீடிப்பார். செயலாளர் ஜெய் ஷா ஐ.சி.சி.யின் மாற்று இயக்குனராக இருப்பதுடன், ஐ.சி.சி.யின் தலைமை செயற்குழு கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதியாக கலந்து கொள்ள அனுமதி அளிக்கபட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் மற்றும் ஸ்கோரர்களின் ஓய்வு பெறும் வயதை 55-ல் இருந்து 60 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அதிக போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story