கடைசி இரு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார் வார்னர்


கடைசி இரு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார் வார்னர்
x
தினத்தந்தி 30 Dec 2020 11:28 PM GMT (Updated: 30 Dec 2020 11:28 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வெறும் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் எழுச்சி கண்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டுவந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. கொரோனா பிரச்சினை இருப்பதால் இரு அணி வீரர்களும் உடனடியாக சிட்னிக்கு செல்லவில்லை. மேலும் சில தினங்கள் மெல்போர்னிலேயே தங்கியிருந்து பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

3-வது டெஸ்ட் தொடங்க 3 நாட்கள் இருக்கும் போது சிட்னிக்கு கிளம்புவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்திய வீரர் ரோகித் சர்மா நேற்று அணியினருடன் இணைந்தார். அவரை வரவேற்ற தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ‘போட்டிக்கு முன்பாக அவரது உடல்தகுதி எப்படி இருக்கிறது என்பதை அணியின் மருத்துவ குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்’ என்று ஏற்கனவே கூறியுள்ளார். சிட்னி டெஸ்டில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே, 2-வது டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு நாள் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் இரு டெஸ்டில் விளையாடவில்லை.

இந்த நிலையில் கடைசி இரு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் 34 வயதான வார்னர் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் காயத்தில் இருந்து வேகமாக தேறி வருகிறார். சிட்னி டெஸ்டுக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் அதற்குள் களம் இறங்குவதற்குரிய எல்லா வாய்ப்புகளும் அவருக்கு வழங்கப்படும் என்று தேசிய தேர்வாளர் டிரெவர் ஹான்ஸ் தெரிவித்தார்.

இதே போல் பயிற்சி ஆட்டத்தின் போது பந்து தலையில் தாக்கியதால் பாதிப்புக்குள்ளான இளம் பேட்ஸ்மேன் வில் புகோவ்ஸ்கியும் மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளார். பாதிப்பில் இருந்து அவர் முழுமையாக மீண்டு விட்டாரா என்பதை அறிய இன்னும் ஒரு சோதனை இருக்கிறது. அதிலும் அவர் சரியாக இருந்தால் 3-வது டெஸ்டில் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார். அதே சமயம் 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் ஒற்றை இலக்கத்தில் (0, 4) நடையை கட்டிய தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் கழற்றி விடப்பட்டு உள்ளார்.

Next Story