நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி
x
தினத்தந்தி 30 Dec 2020 11:33 PM GMT (Updated: 30 Dec 2020 11:33 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்தது. பவாத் ஆலம் சதம் வீண் ஆனது.

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 431 ரன்களும், பாகிஸ்தான் 239 ரன்களும் எடுத்தன. அடுத்து 192 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்து, பாகிஸ்தான் அணிக்கு 373 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்-அவுட் ஆனார்கள். 4-வது நாள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (34 ரன்), பவாத் ஆலம் (21 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடியது. அசார் அலி 38 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர் பவாத் ஆலமும், பொறுப்பு கேப்டன் முகமது ரிஸ்வானும் இணைந்து நியூசிலாந்தின் தாக்குதலை சமாளித்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக ஆடிய 35 வயதான பவாத் ஆலம் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். 2009-ம் ஆண்டு தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்த பவாத் ஆலம் அதன் பிறகு இப்போது தான் மூன்று இலக்கத்தை தொட்டுள்ளார். டிரா செய்யும் முனைப்புடன் தடுப்பாட்டத்தில் மல்லுகட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 240 ரன்களை எட்டிய போது பிரிந்தது. முகமது ரிஸ்வான் 60 ரன்களில் (191 பந்து), கைல் ஜாமிசனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். கூட்டாக 380 பந்துகளை சந்தித்த இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்தில் பவாத் ஆலம் (102 ரன், 269 பந்து, 14 பவுண்டரி) வாக்னெரின் ஷாட்பிட்ச் பந்துக்கு இரையானார். எஞ்சிய வீரர்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற கடுமையாக போராடியும் பலன் இல்லை. பாகிஸ்தான் அணி 123.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் இன்னும் 4.3 ஓவர் தாக்குப்பிடித்திருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கும். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், கைல் ஜாமிசன், நீல் வாக்னெர், மிட்செல் சான்ட்னெர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து முதல்முறையாக முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே தரவரிசை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். நியூசிலாந்து-பாகிஸ்தான் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம்

பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 60 புள்ளிகள் கிடைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இதுவரை 360 புள்ளிகள் குவித்துள்ள நியூசிலாந்து சதவீதம் அடிப்படையில் (66.7) 3-வது இடம் வகிக்கிறது. ஆனாலும் நியூசிலாந்து அணி தொடர்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா 76.6 சதவீதத்துடன் முதலிடத்திலும், இந்தியா 72.2 சதவீதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

Next Story