கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் வில்லியம்சன் சுமித்தை பின்னுக்கு தள்ளினார் + "||" + Test cricket batsmen In the rankings Williamson took the number one spot

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் வில்லியம்சன் சுமித்தை பின்னுக்கு தள்ளினார்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் வில்லியம்சன் சுமித்தை பின்னுக்கு தள்ளினார்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலிடத்தை பிடித்தார்.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 2020-ம் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட கடைசி தரவரிசை பட்டியலான இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.இதுவரை முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (0, 8 ரன்) ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்ததால் அவர் 24 புள்ளிகளை பறிகொடுத்து இத்தகைய வீழ்ச்சியை சந்தித்துள்ளார்.

3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் (129 ரன்) விளாசி அசத்திய வில்லியம்சன் 13 புள்ளிகள் கூடுதலாக பெற்று மொத்தம் 890 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை தவற விட்டதற்காக 9 புள்ளிகளை இழந்தாலும் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

30 வயதான வில்லியம்சன் 2015-ம் ஆண்டில் சிறிது காலம் ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்தார். அதன் பிறகு ஸ்டீவன் சுமித்தும், விராட் கோலியும் தான் ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்தை மாறி மாறி அலங்கரித்தனர்.

ரஹானே உயர்வு

2020-ம்ஆண்டில் சுமித் 313 நாட்களும், கோலி 51 நாட்களும் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. வில்லியம்சனை விட 13 புள்ளி பின்தங்கியுள்ள ஸ்டீவன் சுமித் இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் ரன் குவித்தால் மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும். ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலி குழந்தை பிறப்புக்காக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் விலகி விட்டதால் மேலும் புள்ளிகளை இழக்க வேண்டியது இருக்கும்.

மெல்போர்ன் டெஸ்டில் 112 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடித்தந்த பொறுப்பு கேப்டன் அஜிங்யா ரஹானே 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். 67 புள்ளிகளை கூடுதலாக சேகரித்துள்ள ரஹானே மொத்தம் 784 புள்ளிகளுடன் இருக்கிறார். சரிவை சந்தித்துள்ள மற்ற இந்திய வீரர்களான புஜாரா 10-வது இடமும் (2 இடம் குறைவு), மயங்க் அகர்வால் 19-வது இடமும் (5 இடம் சறுக்கல்) வகிக்கிறார்கள்.

செஞ்சூரியனில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 199 ரன்கள் திரட்டி ஹீரோவாக ஜொலித்த தென்ஆப்பிரிக்க வீரர் பாப் டு பிளிஸ்சிஸ் 14 இடங்கள் எகிறி 21-வது இடத்தை வசப்படுத்தியுள்ளார். புதிய வரவான இந்திய இளம் வீரர் சுப்மான் கில் 76-வது இடத்தில் இருந்து தனது தரவரிசை பயணத்தை தொடங்குகிறார். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 11 இடங்கள் உயர்ந்து 36-வது இடத்தை பெற்றுள்ளார்.

அஸ்வின் முன்னேற்றம்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 5 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 9-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார். இதே போல் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் அதிகரித்து 9-வது இடத்தில் உள்ளார். அறிமுக டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு தரவரிசையில் 77-வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. ரவீந்திர ஜடேஜா 4 இடம் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றிருக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மாற்றமின்றி டாப்-5 இடங்களில் தொடருகிறார்கள்.

அணிகளில் யார்?

டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியல் ஒரு தொடர் முடிந்த பிறகே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் 3-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி டிரா செய்தாலே போதும். நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்து விடலாம். மாறாக தோற்றால் பின்னடைவு தான். நியூசிலாந்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தாலும் நீண்ட நாள் அந்த அந்தஸ்துடன் இருப்பது கடினம். ஏனெனில் தற்போது 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்டில் வெற்றி பெற்றால் முதலிடத்துக்கு வந்து விடும். இதே போல் இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கினால், அந்த அணிக்கு மறுபடியும் ‘நம்பர்’ ஒன் இடம் கிட்டும்.