3 நாட்கள் ஊரடங்கு அமல்: பிரிஸ்பேனில் கடைசி டெஸ்ட் நடைபெறுவதில் புதிய சிக்கல்


3 நாட்கள் ஊரடங்கு அமல்: பிரிஸ்பேனில் கடைசி டெஸ்ட் நடைபெறுவதில் புதிய சிக்கல்
x
தினத்தந்தி 8 Jan 2021 11:46 PM GMT (Updated: 8 Jan 2021 11:46 PM GMT)

3 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பிரிஸ்பேனில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிட்னி, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் பிரிஸ்பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது. ஓட்டலில் தாங்கள் தங்கி இருக்கும் தளத்தை விடுத்து மற்ற தளத்தில் இருக்கும் வீரர்களை கூட சந்திக்க முடியாது என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் நடைமுறைகளை மதித்து செயல்படுவதாக இருந்தால் மட்டும் இந்திய அணி பிரிஸ்பேன் வரலாம். இல்லையெனில் இங்கு வர வேண்டாம் என்று அந்த மாகாண சுகாதாரத் துறை எச்சரித்து இருந்தது.

தனிமைப்படுத்துதலுக்கு இணையான இந்த கொரோனா தடுப்பு நடைமுறைகளால் பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட இந்திய அணி தயக்கம் காட்டுகிறது. இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே புதிய கெடுபிடிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி எழுதப்பட்ட கடிதத்தில், ‘பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெற வேண்டும் என்றால் கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்த விவகாரம் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சுமுக முடிவு காண பேச்சுவார்த்தை நடத்தியதில் சில விஷயங்களில் விலக்கு அளிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாய்மொழியாக சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமான உறுதிமொழியை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பிரிஸ்பேனில் நேற்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு அறிவித்துள்ளது. இதன்படி அத்தியாவசியமின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. அங்கு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஊழியர்களுக்்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் அரங்கேறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தால் இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல மறுப்பு தெரிவிக்கலாம். அப்படி மறுப்பு தெரிவித்தால் கடைசி டெஸ்ட் போட்டி, 3-வது போட்டி நடந்து வரும் சிட்னியிலேயே நடத்தப்படலாம் என்றும் அதற்கு வாய்ப்பில்லை என்றால் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், கடைசி டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனில் விளையாடவே ஆஸ்திரேலிய அணி விரும்புகிறது, அங்கு ஆடுவதில் தங்கள் அணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் நேற்று தெரிவித்தார்.

Next Story